அதிபர்கள் நியமனத்தின்போது சகல பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை ஒரே நடைமுறை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கம்பஹா விக்கிரமாராச்சி மருத்துவக் கல்லூரி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றியே பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது.

அதிபர்கள் நியமனத்தின்போது சகல பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை ஒரே நடைமுறையே பின்பற்றப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் நேற்று (09) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

முன்னைய அரசாங்கங்கள் அதிபர்கள் நியமனத்தை சிக்கலாக்கியிருந்தன. பல ஆண்டுகளாக முறையான நடைமுறைகள் இல்லாமல் பதில் அதிபர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் அநீதியிழைக்கப்படும் வகையில் பாடசாலை நிர்வாகத்தை மிகவும் கேள்விக்குரிய நிலைக்கு தள்ளியிருந்தது. தற்போது, இந்த நடைமுறை தற்போதைய விதிமுறைகளின்படி, சரியான முறையைப் பயன்படுத்தி சரி செய்யப்படுகிறது. ஒருவருக்கு அதிபர் பதவி வகிப்பதற்குத் தேவையான தகுதிகளின் அடிப்படையில், அனைத்து தேசியப் பாடசாலைகளுக்கும், வெற்றிடமாக உள்ள இடங்களுக்கும் நேர்முகப் பரீட்சைகள் மூலம் அதிபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நாங்கள் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொருவிதமாக பாரபட்சமாக நடத்துவதில்லை. அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை மற்றும் நடைமுறையே பின்பற்றப்படுகின்றன. கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபரும் அந்த முறையின் மூலமே நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் செய்யப்பட்ட எழுத்துமூல மற்றும் வாய்மொழி மூல முறைப்பாடுகளின் அடிப்படையில் பல சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, இந்த விடயத்தில் முறையான மற்றும் பகுப்பாய்வு ரீதியான விசாரணையை நடத்த ஒரு நிபுணர் குழுவை நான் நியமித்துள்ளேன். நாங்கள் கல்வி ஊழியர்கள் மற்றும் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினோம். ஆரம்பக் கலந்துரையாடல்களில் இருந்து நாங்கள் கண்டறிந்த பல அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன.

குறிப்பாக, கம்பஹா விக்கிரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரி, தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையிலேயே ஒரு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது. தேவையான மனித வளங்கள் அல்லது உட்கட்டமைப்பு இல்லாமல் புதிய பீடங்களும் புதிய பட்டப்படிப்பு திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அடிப்படை நோக்கங்களுக்கு புறம்பாக, தொழில்நுட்பம், சமூகவியல் மற்றும் முகாமைத்துவம் போன்ற கற்கைகள், சுதேச மருத்துவத்துக்கு மேலதிகமாக வசதிகள் இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை தயாரிக்க ஒரு முறையான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு