புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின் (Isabelle Catherine Martin), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை 2025 டிசம்பர் 15ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.
இதன்போது ’திட்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கனடா நாட்டின் அனுதாபங்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கைக்கு மேலும் ஆதரவை வழங்கக் கனடா தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தினார். மீட்பு மற்றும் உடனடி நிவாரண நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அனர்த்தத்திற்குப் பின்னரான இரண்டாம் கட்டத்தை இலங்கை தற்போது அடைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், கனடா உள்ளிட்ட சர்வதேச சமூகம் வழங்கிய உதவிக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பெரும்பாலான பாடசாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் பாடசாலைகளை டிசம்பர் 16 முதல் மீண்டும் திறக்கத் தீர்மானிக்கப்பட்டதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். இயல்பு நிலைக்குத் திரும்புவதன் முக்கியத்துவத்தையும், பொருத்தமான இடங்களில் நிவாரண மையங்களைப் படிப்படியாகக் குறைப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான முக்கியத்துவத்தை அங்கீகரித்து, விவசாயத் துறையை ஆதரிப்பதில் கனடா கவனம் செலுத்துவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மீண்டும் பயிர்ச்செய்கையைத் தொடங்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அவர்களுக்கு உதவ ஏற்கனவே நிவாரண உதவி நடவடிக்கைகளைத் ஆரம்பித்திருப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
மொழிபெயர்ப்பு மற்றும் தகவல் தொடர்பாடலுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு கருவிகளின் சாத்தியமான பயன்பாட்டைக் குறிப்பிட்டு, அனைத்துக் குடிமக்களையும் உள்ளடக்கிய மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக உத்தியோகபூர்வ மொழிக் கொள்கைகளைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். கல்வித் துறையில், குறிப்பாக ஆசிரியர் பரிமாற்றத் திட்டங்களில், ஏற்கனவே உள்ள மாணவர் ஒத்துழைப்பு முயற்சிகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வம் தெரிவித்த பிரதமர், பொதுநலவாய கற்றலுடன் (COL) இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு பற்றியும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் சார்பாக, அரசியல் மற்றும் வர்த்தகப் பதில் ஆலோசகர் பேட்ரிக் பிக்கெரிங் (Patrick Pickering) மற்றும் கூட்டுறவுத் தலைவர் கிரில் ஐயோர்தனோவ் (Kiril Iordanov) ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) திருமதி. பிரமுதிதா மனுசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவ