பாராளுமன்றத்தை, மக்களுக்காக முன்னிற்கும் நம்பிக்கைக்குரிய இடமாக மீண்டும் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

உயர் மகத்துவத்தை பாதுகாத்து, மக்களுக்காக முன்னிற்கும் நம்பிக்கைக்குரிய இடமாக பாராளுமன்றத்தை மாற்றியமைப்பதற்கு சபாநாயகர் அசோக ரன்வல அவர்களால் முடியுமென தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பத்தாவது (10) பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே (21) பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் முன்மொழிவு மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் சபை வழிமொழிதலுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

புதிய சபாநாயகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமான நபர் நீங்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மக்களுக்காக முன்னிற்கும் தூய்மையான அரசியல் கையாள்கையைக் கொண்ட நீங்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்த பாராளுமன்றத்தின் உயர் மகத்துவத்தை பாதுகாத்து , பாராளுமன்றம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் மக்களுக்காக முன்னிற்கும் இடமாக பாராளுமன்றத்தை மாற்றியமைப்பதற்கு புதிய சபாநாயகருக்கு இயலுமென நம்புவதாகவும் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடக பிரிவு