எந்த ஒரு பிள்ளையும் கைவிடப்படுதல் ஆகாது, சகல பிள்ளைகளினதும் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் கருத்துக்கு அமைய, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் சமுதாயத்துடன் பகிரப்பட்ட, தற்போது அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒன்றான ’அர்த்த’ என்னும் திட்டத்தை யதார்த்தமாக்கும் முதல் படி இன்று எடுத்து வைக்கப்பட்டது.
சிறுவர் இல்லங்களிலும் பாதுகாப்பு மையங்களிலும் வாழ்ந்து வருகின்ற சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அச்சிறுவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய நல்வாழ்வுத் திட்டத்தின் அங்குரார்ப்பண விழா ஜூலை மாதம் 15 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் கொழும்பில் இடம்பெற்றது.
சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் தலைமையில் செயல்படுத்தப்படுகின்ற ’அர்த்த’ திட்டத்தின் உத்தியோகபூர்வ வங்கியாக இந்த நாட்டின் புகழ்பெற்ற அரசு வங்கியான தேசிய சேமிப்பு வங்கி கைகோர்த்துக் கொண்டிருக்கின்றது. சிறுவர்களுக்கு மாதாந்தம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாயில் 3000 ரூபாய் அவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவர்கள் வாழ்ந்து வருகின்ற சிறுவர் இல்லங்களின் நிர்வாகத்திற்கு வழங்கப்படுவதோடு, எஞ்சிய 2000 ரூபாய் பணம் அச்சிறுவர்களின் பெயரில் வங்கிக் கணக்கில் சேமிக்கப்படும். அவர்கள் இச்சமுதாயத்தில் அடியெடுத்து வைக்கும் போது அவர்களின் எதிர்கால கல்விக்காகவோ அல்லது தொழில் சார்ந்த தேவைகளுக்காகவோ பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலேயே இந்த சேமிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் அவர்கள்:
"பல்வேறு காரணங்களினால், பல்வேறு சந்தர்ப்பங்களில், குடும்பத்தோடு சமுதாயத்தில் பெற்றோரின் அரவணைப்போடு தமது இல்லத்தில் வாழ வேண்டிய வாய்ப்பை இழக்கின்ற சிறுவர்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற கடைசித் தேர்வாகவே சிறுவர் இல்லமோ அல்லது அத்தகைய பாதுகாப்பு மையங்களோ அமைகின்றன. அத்தகைய இடங்களில் வசித்து வருகின்ற சிறுவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று நாம் கருதுகின்றோம்.
ஒரு அரசாங்கம் என்ற வகையில் இந்த சிறுவர்களின் கல்வியை உறுதிப்படுத்துதல், அவர்களின் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. ஆகையினால் அனைத்துப் பிள்ளைகளையும் பிள்ளைகளாகக் கருதி, அந்த அனைத்து சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசாங்கத்தால் நழுவி விட இயலாது. அந்த வகையிலேயே இந்த ’அர்த்த’ என்னும் செயல்திட்டம் அர்த்தமுள்ள தேசிய செயல்திட்டமாக அமைகின்றது. இந்த சிறுவர் இல்லங்களில் வசித்து வருகின்ற பிள்ளைகளின் அடையாளத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் அவர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதே எமது இந்த ’அர்த்த’ செயல்திட்டத்தின் முக்கிய நோக்கமும் எதிர்பார்ப்பும் ஆகும்."
இவ்வாறு பாதுகாப்பு இல்லங்களில் வாழ்ந்து வருகின்ற பிள்ளைகளையும் எமது பிள்ளைகளாகவே கருத வேண்டும். ஏனைய சிறுவர்களுக்கு இருக்கின்ற சகல உரிமைகளும் இச்சிறுவர்களுக்கும் இருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அச்சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதே இந்த ’அர்த்த’ செயல்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இச்சிறுவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவது எம் அனைவரிடமும் இருக்கும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுப் பிரதமர், இச்சிறுவர்களின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் உறுதிப்படுத்தும் முக்கிய பொறுப்பு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு இருப்பதாகவும் ஆகையினால் அவர்கள் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.
இச்செயல்திட்டத்திற்கு என அரசாங்கத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கி இருப்பதோடு, அதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் இருக்கின்ற 356 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வசித்து வருகின்ற, கைவிடப்பட்ட, அனாதையான, அல்லது நீதிமன்றங்கள் மூலம் சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட என மொத்தமாக ஒன்பது ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஒன்று (9191) சிறுவர்களுக்கு ’அர்த்த’ செயல்திட்டத்தின் மூலம் மாதாந்தம் 5000 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உரையாற்றுகையில்:
"தமது சொந்த வீட்டை விட்டுப் பிரிந்து சிறுவர் இல்லத்திலோ அல்லது அத்தகைய பாதுகாப்பு மையத்திலோ வசித்து வருகின்ற பிள்ளைகளின் பொறுப்பினை ஏற்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற வகையில் இத்தகைய செயல்திட்டம் ஒன்றினைச் செயல்படுத்துவது வரலாற்றில் இதுவே முதல் தடவை ஆகும்" என்று கூறினார். அத்தோடு இது மனிதநேயம் மிக்க பொறுப்பாகும் என்றும் அதற்கு இந்நாட்டின் சகல குடிமக்களும் தமது பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள் என்றும் மேலும் கூறினார்.
பங்கேற்பாளர்கள்:
இந்நிகழ்வில் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கர, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ. ஓல்கா, தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் உள்ளிட்ட பிரமுகர்கள், பிரதேச செயலாளர்கள், அரசு உத்தியோகத்தர்கள், ’அர்த்த’ பயனாளிகளான சிறுவர் இல்லங்களின் காப்பாளர்கள் அத்தோடு இந்த விழாவை அலங்கரிக்க தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு