அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது, தற்போதைய அரசாங்கம் எத்தகைய சமுதாயத்தையும் நாட்டையும் உருவாக்க எதிர்பார்க்கிறது? இவ்வாறு கட்டியெழுப்பப்படும் நாட்டில் இருக்க வேண்டிய பெறுமானங்கள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் முதலாவது வாக்கெடுப்பு இடம்பெற்ற இன்றைய தினம் (2025.02.25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

முன்வைக்கப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்களுக்கு அப்பால் சென்று இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சிந்தனைகளை கவனமாக ஆராய்ந்துபார்க்குமாறு குறிப்பாக நம் நாட்டு மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டிற்கு ஒரு புதிய திசையை, ஒரு புதிய சிந்தனையை மற்றும் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடிப்படையாகக் கொண்டுள்ள பெறுமானங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலான வரவுசெலவுத்திட்டம் என்பதை நான் தெளிவாக சுட்டிக்காட்டுகிறேன்.

எங்கள் அடுத்த கட்ட செயற்பாடுகள், நமது பயணத்தின் அடித்தளம், நாம் உருவாக்க நினைக்கும் சமுதாயம், நாம் கட்டியெழுப்ப விரும்பும் நாடு, அந்த நாட்டில் இருக்க வேண்டிய பெறுமானங்கள் என்ன என்பது இந்த வரவு செலவுத்திட்டத்தில் மிகத் தெளிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தை நவதாராளவாத வரவு செலவுத் திட்டம் என்றும் ரணிலின் கொள்கைகளின் நீட்சி என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சில சமயங்களில் அவர்களும் இதைத்தான் செய்ய இருந்தார்கள் என்றும் கூறுகிறார்கள், அவர்களின் முன்மொழிவுகள்தான் இவை என்றும் சொல்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி இடதுசாரி கட்சி என்பதால் இது கட்சியின் கொள்கைக்கு முரணானது என்றும் கூறுகிறார்கள்.

எதிர்கட்சிகள் கட்டமைக்க முயற்சிக்கும் வாதத்தில் அவர்களின் சிந்தனை குழம்பியுள்ளது என்று நான் நினைக்கிறேன். நமது சிந்தனை முறை அவர்களுக்குப் எப்படியும் விளங்கப்போவதில்லை. அது நியாயமானது தான். இந்த வரவு செலவுத்திட்டத்தை நவதாராளமய வரவுசெலவுத்திட்டம் என்கிறார்கள்.

நவதாராளவாதத்தைப் பற்றிப் பேசும்போது, அது கட்டமைக்கப்பட்டிருக்கும் சில அடிப்படை அம்சங்கள் உள்ளன. அவற்றில் சில பொருளாதாரச் செயற்பாட்டிலிருந்து அரசாங்கத்தை விலக்கி வைப்பது, சந்தைக்கு முக்கிய இடத்தைக் வழங்குவது, சந்தையை முழுமையாக நம்பி சந்தையைக் கையாள முழுச் சுதந்திரத்தை வழங்குவது. நவ தாராளமயம் பற்றி பேசும் போது முழு சமூகமுமே நவ தாராளவாத சிந்தனையில் மறுசீரமைக்கப்பட்டது. புதிய தாராளமயம் சமூகத்தை மறுசீரமைப்பதற்கான ஒரு அடிப்படை புள்ளியாக தனிநிலைக் கொள்கையை வலுவாக நம்புகிறது. அவர்கள் ஒரு சமூகத்தைப் பற்றி பேசவில்லை, புதிய தாராளமயம் தனிநபர்களை மையமாகக் கொண்ட சிந்தனையைக் கொண்டுள்ளது.

அதற்கு சிறந்த உதாரணம், நவதாராளவாதத்தின் முக்கிய கோட்பாட்டாளராக அறியப்படும் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய மார்கரெட் தட்சர், சமூகம் என்று ஒன்று இல்லை, தனிநபர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறுகிறார். இது நவதாராளவாத சிந்தனையில் உள்ள தனிமனித மைய சிந்தனையை காட்டுகிறது.

நவதாராளவாதத்தின் வரையறையை விட்டுவிட்டு, இலங்கையில் இதுவரை இருந்தது நவதாராளவாதம் தானா என்று பார்ப்போம். எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவர்கள் அதை நவதாராளவாதம் என்று அழைக்கிறார்கள், ஆனால் அது புதிய தாராளமயம் அல்ல. நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது நாட்டில் நவதாராளவாதம் இருக்கவில்லை. உண்மையில், குடும்ப ஆதரவு கொள்கையுடைய தமக்கு விசுவாசமான தமது நண்பர்களை கவனிக்கும் ஆட்சி முறையும் பொருளாதார முறையுமே இருந்தது.

தாராளமயத்தின் படி, ஆட்சி முறை பொது சேவையிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த நாட்டை ஆண்டவர்கள் அரச சேவையை தமது தனிப்பட்ட நலனுக்காக தனியார் நிறுவனம் போன்று தன்னிச்சையாக விரிவுபடுத்தியுள்ளனர். பொதுச் சேவையை சுமையாகப் பார்க்கும் நிலைக்கு சமூகத்தை தள்ளியுள்ளனர். சந்தைச் சூழலை சீர்குழைத்துள்ளனர். சந்தையை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காதது, மிகவும் ஊழல் நிறைந்த தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்ட ஒரு சிதைந்த பொருளாதாரமே உருவானது.

பொருளாதார சிந்தனையும் இல்லை. தனிமனித சிந்தனை மட்டுமே இருந்தது. அவ்வாறு பல்வேறு வழிகளிலம் சிதைக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட மற்றும் ஊழல் நிறைந்த நாட்டையே நாம் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. எனவே நாம் அங்கிருந்து தான் தொடங்கவேண்டியிருந்தது. எம்மிடம் வழங்கப்பட்டது நவதாராளவாதம் முழுமையாக பின்பற்றப்பட்ட ஒரு தூய தேசமல்ல.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில், சமூகத்தை வலுப்படுத்துதல், சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சி, தலையீடு என்பனவாகும். இது வெறுமனே மேலோட்டமான ஜனநாயகம் மட்டுமல்ல. உண்மையான அர்த்தமுள்ள பங்கேற்பு ஜனநாயகமாகும். சந்தையை ஒழுங்குபடுத்துவதை எடுத்துக் கொண்டால், சந்தையை ஒழுங்குபடுத்துவது மட்டும் அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல. எங்கள் சிந்தனையில், தனியார் மற்றும் அரச துறை ஆகிய இரண்டினதும் தலையீட்டின் அடிப்படையிலும் கட்டியெழுப்பப்படும் சந்தை. சந்தையை ஒழுங்குபடுத்துவது மட்டுமே அரசாங்கத்தின் பணி என்று நாம் பார்க்கவில்லை, அரசாங்கத்திற்கும் ஒரு பங்கு உள்ளது. இவையனைத்தும் தான் எமது வரவுசெலவுத் திட்டத்தில் இருக்கும் சிந்தனைகள். அந்த சிந்தனைக்குத் தான் பொருளாதார ஜனநாயகம் என்று விளக்கம் கொடுத்துள்ளோம்.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாங்கள் யாரும் தவரவிடப்படவில்லை. பெண்கள், சிறுவர்கள், பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரிவினருக்கும் குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கும் வரவுசெலவுத்திட்டம்பல ஆண்டுகளாக நிறுவனமயமாக்கப்பட்ட பிள்ளைகளை சமூகமயமாக்குவது தொடர்பாக பல ஆண்டுகளாக போராடி வந்த விடயங்கள் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் சாதிக்கப்பட்டுள்ளன. சிறுவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் முறைகள், பெண்களை பொருளாதாரத்துடன் இணைத்துக்கொள்ளும் முறைகள், அவர்களின் பாதுகாப்பில் கவனம்செலுத்தும் பொருளாதாரம் ஆகியவற்றை கவனத்திற்கொண்டுள்ளோம். அனைத்து மக்களைப் பற்றியும் சிந்தித்து கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

மருந்துப்பொருட்களுக்கு வரி சேர்க்கப்பட்டுள்ளது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவை அனைத்தும் பொய், அப்படி எதுவும் இல்லை. இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வெற் வரி எதுவும் சேர்க்கப்படவில்லை. உள்ளூர் மருந்து உற்பத்தியில் பொதியிடலுக்கு தேவையான பொருட்களுக்கான வெற் வரியை நீக்கியுள்ளோம்.

இந்த ஆண்டு கல்விக்காக செலவிடப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு பராய கல்வி முதல் உயர்கல்வி வரை வரலாற்றில் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கல்விக்கு என்று தனியாக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது, வேறு என்ன இவர்கள் கூறுகிறார்கள்? சமூகத்தை வலுப்படுத்தி பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளோம். இந்த வரவுசெலவத்திட்டத்தில் கூட்டுமுயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.தேசிய ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டுள்ளது.

இலங்கையர் தினம் என பெயரிட்டு அதற்காக 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேசிய அளவில் கொண்டாடும் பெரும்பாலான தினஙகள் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகும். எனவே, அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களின் பல்வகைமையை பேணிக்கொண்டு, அந்த பல்வகைமையின் மூலம் இந்த நாடு எவ்வாறு அழகாக இருக்க முடியும் மற்றும் இந்த நாட்டை எவ்வாறு பெருமைப்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு நாங்கள் முதன்முறையாக முன்மொழிகிறோம். முதன்முறையாக, யாரையும் விட்டு வைக்காமல் அனைவரும் நாட்டின் பிஜைகளாக பங்கேற்கக்கூடிய "இலங்கையர் தினம்" ஒன்றை நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

இந்த வரவுசெலவுத்திட்டத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நாம் எப்படி கூட்டுத்தன்மை, நேர்மை மற்றும் ஜனநாயகத்தை உருவாக்குவோம் என்பதைக் காட்டுகிறது. Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் ஒத்துழைப்பை விருத்தி செய்து முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனநாயகம் என்றால் வேறு என்னவாக இருக்க முடியும்? ஜனநாயகம் என்பது தேர்தலுக்குச் சென்று வாக்களிப்பது மட்டுமல்ல. அந்த இடத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை நாம் விரிவுபடுத்தியுள்ளோம்.

நாங்கள் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது, எமக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன, ஒன்று பயந்து, எங்களிடம் உள்ளதை மட்டும் தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டுசெல்வதா? அல்லது இந்த நெருக்கடிகளை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு துணிவுடன் இந்த நாட்டை முழுமையானதொரு மாற்றத்திற்கு கொண்டு செல்வதா? என்பதாகும். நாங்கள் இரண்டாவது முறையைத் தேர்ந்தெடுத்தோம், எத்தகைய தடைகள், சவால்கள் வந்தாலும் எழுபது வருடங்களாக இந்த நாட்டை இழுத்துச் சென்ற வழியில் வழிநடத்த மாட்டோம், ஆனால் இந்த நாட்டை மாற்றுவோம் என்ற உறுதியுடன் அந்த துணிச்சலான தேர்வை எடுத்தோம். அந்த உறுதியுடன் சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவுசெலவுத்திட்டம் இதுவாகும். இதில் எங்களால் முடிந்ததைச் செய்துள்ளோம். சமூகப் பாதுகாப்பிற்காக இன்னும் பணம் வேண்டும் என்பதே எமது விருப்பம். ஆனால் இதை நாங்கள் வரம்புகளுக்குள் செய்துள்ளோம். ஆனால் இந்த வரம்பிற்குள்ளும், நாம் செல்ல வேண்டிய திசைவழி நன்றாகக் காட்டப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன்.

இன்னும் சில தரப்பினருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த அனைத்து விடயங்களும் எங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ளது என்பது இவர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நாங்கள் அனைத்தையும் செய்துள்ளோம். ஜனாதிபதியின் உரையைக் கேட்டதும் நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன். பல வருடங்களாக நாங்கள் பேசிக் கொண்டிருந்த விடயங்கள் இப்போது எங்கள் முதலாவது வரவுசெலவுத்திட்டத்தில் நடைமுறைக்கு வரப் போகிறது என்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.

சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இன்னொரு பொய்க் கதையை சொல்கிறார். ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக உறுதியளித்துள்ளோம். இந்த உத்தேச சம்பள உயர்வு மூலம் அதிபர்கள் 7வது இடத்திலும், ஆசிரியர்கள் 8வது இடத்திலும் உள்ளனர். அரசாங்க சேவையில் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் நாட்டின் 10 அதிகூடிய சம்பள தரவரிசைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிபர்களின் சம்பளம் 30,105/= அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவரின் சம்பளம் 25,360/= ஆக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச சம்பளம் 15,750/= ஆக அதிகரித்துள்ளது.

சம்பள உயர்வு என்பது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. எங்கள் கொள்கைகளில், நமது பொருளாதார ஜனநாயக செயல்பாட்டில் பொது சேவைக்கு கெளரவத்தை வழங்கியிருக்கிறோம். முன்னைய அரசாங்கங்கள் அரச சேவையை அழித்தது மட்டுமன்றி, தன்னிச்சையான ஆட்சேர்ப்புகளைச் செய்து பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அரசாங்க சேவை மீது அரசு ஊழியர்களுக்கு இருந்த நம்பிக்கையை இல்லாமல்செய்தனர். பொதுச் சேவை குறித்த எதிர்மறையான கருத்துக்கள் சமூகத்தில் உருவாகின.

நாட்டிற்கு வலுவான, நம்பகமான மற்றும் மக்கள்மைய பொது சேவை தேவை. அதனால்தான் இந்த முதலீட்டைச் செய்கிறோம். அதன் காரணமாகவே மிகவும் கடினமான சூழ்நிலையிலும் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க தலையிட்டுள்ளோம். அதனை நாம் படிப்படியாக செய்து வருகிறோம். நாங்கள் பல வரம்புகளுடன் வேலை செய்கிறோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ன சொன்னாலும் மக்கள் இதை புரிந்து கொண்டுள்ளனர். இதை மக்களுடன் இணைந்து செய்து வருகிறோம். மக்களுக்கு நம்பிக்கை இருப்பதை நாம் அறிவோம்.

இது வரலாற்று சிறப்புமிக்க வரவுசெலவுத்திட்டம். இந்த நாட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வரவுசெலவுத்திட்டம். நாங்கள் 1977 பற்றி பேசுகிறோம். இங்கு நிதியமைச்சர் ரொனி டி மெல் பற்றி நிறைய பேசினார். அந்த வரவுசெலவுத்திட்டமும் இந்த நாட்டை மாற்றியது. அதில் உடன்படுவதா இல்லையா என்பதில் அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும் 30, 40 வருடங்களாக இந்த நாடு தீர்க்கமான வகையில் மாற்றப்பட்டது. அதேபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் திசைவழியை மாற்றும், இந்நாட்டின் சிந்தனையை மாற்றும், இந்நாட்டில் சமூகம் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தை, இந்நாட்டின் கட்டமைப்பை மாற்றக்கூடிய ஒரு தீர்க்கமான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த திசைவழியையே நாங்கள் காட்டுகிறோம். இது எங்களின் முதல் வரவுசெலவுத்திட்டம். இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஆனால், முதல் வரவுசெலவுத்திட்டத்திலேயே நாம் கட்டியெழுப்பப் போகும் நாட்டை அடையாளப்படுத்தியிருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

வளமான நாடு அழகான வாழ்க்கை என்பதை பொருள்கோடல்செய்வது மட்டுமன்றி, அதற்கு உயிர்ப்பையும் கொடுத்திருக்கிறோம்.

முன்னைய அரசாங்கங்கள் என்ன செய்தன? பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சட்டங்கள் நல்லது. ஆனால் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்குள் மட்டுப்படுத்தப்படுவதால் அவை கிடைத்துவிடாது. அமைச்சில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் முறையின்படியே இது அர்த்தமுள்ளதாக மாறுகிறது. அதனை நாங்கள் எங்கள் வரவுசெலவுத்திட்டத்தில் செய்துள்ளோம். நாங்கள் இங்கே ஒரு கொள்கை அல்லது சட்டத்தை உருவாக்குவதோடு மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. மக்கள் உண்மையில் உணரும் தேவையான இடங்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீதி, சமத்துவம், மனிதாபிமானம் போன்றவற்றிற்காக இந்த முழு நாட்டையும் திசைவழிப்படுத்தும் ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே இந்த வரவு செலவுத்திட்டம் உள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு