தெற்காசியாவில் இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவிவரும் இரத்தசோகையைக் குறைக்கும் நோக்கத்துடன் ஜூலை 9 முதல் 11 வரை, "போஷாக்கு மிக்க தெற்காசியா" எனும் தலைப்பில், கொழும்பு சின்னமன் லேக்சைடி ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகப் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்ததாவது:
"பிராந்திய ரீதியில் மிகவும் முக்கியமான இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்தமைக்காக முதற்கண் ஏற்பாட்டுக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநாட்டின் எமது இலக்கு ’தடுக்கக்கூடிய இரத்தசோகையால் எந்த ஒரு இளம் பெண் பிள்ளையோ அல்லது பெண்ணோ பாதிக்கப்படாத ஒரு தெற்காசியாவை உருவாக்கிக்கொள்வதும் அந்த நோக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதுமே ஆகும்’. இந்த இலக்கை அடைய வேண்டுமாயின், சகல பெண் பிள்ளைகளுக்கும் போஷாக்கு மிக்க உணவு, சுகாதாரக் கல்வி மற்றும் தரமான பராமரிப்பு ஆகியவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு பெண்களுக்கு அவர்களின் முழுத் திறனையும் உணர்ந்துகொள்ளக்கூடிய, அதற்காக அவர்களை ஊக்குவிக்கின்ற ஒரு சுற்றாடலை உருவாக்க வேண்டும்.
இந்த நோக்கத்தை அரசாங்கத்தினால் மட்டும் தனியாக நிறைவேற்ற இயலாது. அதனாலேயே இந்த மாநாடு, மேற்குறிப்பிட்ட எமது இலக்கை அடைவதற்கு, எம்மை ஆசீர்வதிக்கும், எமக்கு பக்கபலமாக இருக்கும், சமூகத்தின் சகல தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப்பெறும் புதிய அர்ப்பணிப்பு மற்றும் செயல்முறை சார்ந்த செயல்பாடுகளுக்குத் தயாராகிய ஒரு திருப்புமுனையாக இந்த மாநாடு உருவாகியிருக்கின்றது." எனத் தெரிவித்த பிரதமர் மேலும்,
"இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியிலான இரத்தசோகைப் பிரச்சனை ஒரு கடுமையான பிரச்சனையாக இருப்பினும் அது தீர்வு காண இயலாதது அல்ல. புதிய அர்ப்பணிப்பு, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சி மூலம் நம்மால் தெற்காசியாவின் எதிர்கால சந்ததியினரைப் போஷிக்க முடியும். அதோடு போஷாக்கின்மையின் சக்கரத்தைத் தகர்த்து, ஆரோக்கியமான, நியாயமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பது என்னுடையதும் எமது அரசாங்கத்தினதும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகும். அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் எமது முழுமையான அர்ப்பணிப்பை பெற்றுக்கொடுக்க உறுதிபூண்டுள்ளோம் என்பதை இவ்விடத்தில் நான் நினைவூட்ட விரும்புகின்றேன். பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட எமது போஷாக்குத் திட்டத்தின் ஓர் எதிர்பார்ப்பாக நம் மாணவர்கள் மத்தியில் உரிய போஷாக்கினைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்கள் போஷாக்கின்மைக்கு ஆளாகிவிடுவதைத் தடுத்துக்கொள்வதேயாகும்.
இந்த மாநாட்டில் ஏற்படும் அர்த்த புஷ்டியான கலந்துரையாடல்கள், பெருமதி மிக்க கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதோடு செயல்பாட்டு ரீதியிலான உங்களது அர்ப்பணிப்பை நான் மிகுந்த அக்கறையுடனும் எதிர்பார்ப்புடனும் அவதானித்துக்கொண்டிருப்பேன் என்பதையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஒரு பிராந்தியமாக ஒன்றுபட்டு, இங்கு காணப்படுகின்ற இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியிலான இரத்தசோகையைக் குறைப்பதற்கும் முற்றாக அதனை ஒழித்துக்கட்டுவதற்கும் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தையும் அதற்கான பங்களிப்பினையும் கைகூடச் செய்வதற்கு எமது அர்ப்பணிப்பை பெற்றுத்தருவோம் என உறுதியளிப்பதோடு, ஒன்றுபட்டு எமது இளம் பெண் பிள்ளைகளையும் பெண்களையும் இயன்ற அளவு போஷித்து, அதன் மூலம் பெற்றுக்கொள்ளும் ஆரம்பத்தின் மூலம் ஒட்டுமொத்த தெற்காசியாவையும் போஷிப்போம் என்பதை இந்த மாநாட்டில் முன்மொழிய விரும்புகிறேன்.
மிகவும் முக்கியமான இந்த மாநாடு நடைபெறும் எமது அழகான தீவின் நேசமிகு விருந்தோம்பலையும், ஒப்பற்ற எழிலையும் ரசித்தவாறே, தொழில் ரீதியிலான உங்களது திருப்தியையும் தனிப்பட்ட ரீதியில் என்றும் நெஞ்சில் நினைத்து நிற்கும் பொன்னான காலமாக நீங்கள் இங்கு தங்கியிருக்கும் காலம் அமைய வேண்டும் என உங்களை வாழ்த்துவதற்கும் இதனை ஒரு வாய்ப்பாகக் கொள்ள விரும்புகிறேன்." எனப் பிரதமர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் அவர்களை ஏற்பாட்டுக் குழு சார்பில் Rini Simon Khanna வரவேற்றதோடு, சார்க் அமைப்பின் சார்பில் Md. Golam Sarwar மற்றும் யுனிசெப் (UNICEF) அமைப்பின் சார்பில் Sanjay Wijesekera உள்ளிட்ட விருந்தினர்களும் மாநாட்டின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு