விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் பொருளாதார மற்றும் சமூக சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் பொருளாதார மற்றும் சமூக சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

செப்டெம்பர் 11 ஆந் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே, பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் பின்வருமாறு தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக எதிர்பார்க்கப்படுவது, பரிவுணர்வுடன் கூடிய, பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் மற்றும் பல்வேறு திறன்கள் மற்றும் நிலைமைகளைக் கொண்ட சமூகத்தில் வாழக்கூடிய பிள்ளைகளை உருவாக்குவதாகும். உள்ளடக்கக் கல்விச் செயன்முறையின் கீழ், மாற்றுத்திறன்களைக் கொண்ட பிள்ளைகள் தனியாகக் கல்வி கற்க வேண்டிய ஒரு குழுவாகக் கருதப்படுவதில்லை. எப்போதும் அந்தப் பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒருங்கிணைப்பது (Integrate) மேற்கொள்ளப்பட வேண்டும். விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அரசாங்கம் பிரதானமாக மேற்கொள்ள வேண்டியது, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக ரீதியான சுயாதீனத்தன்மையை அனைத்து வகையிலும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை நாட்டில் ஆரம்பிப்பதாகும்.

விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை (Digital devices) வழங்கும் வேலைத்திட்டமொன்று பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விசேட கல்விப் பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளில் அணுகல் வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், தேசிய பாடசாலைகளின் விசேட கல்விப் பிரிவுகளுக்காக 75 Digital voice recorders, 200 Magnifying glass with light rechargeable மற்றும் 200 Hand-held magnifying கருவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசேட கல்விப் பிரிவுகளில் கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறும் ஆசிரியர்களிடமிருந்து மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வருடத்திலும் எதிர்வரும் வருடத்திலும் தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறும் ஆசிரியர்கள் ஊடாக இந்த வெற்றிடங்களை நிரப்ப முடியும்.

சேவையில் உள்ள ஆசிரியர்களின் தொழில்சார் பயிற்சியை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டில் பல்வேறு பயிற்சி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. செவித்திறன் குறைபாடுள்ள பிள்ளைகளின் செவிப்புலன் வரைபடங்களை வாசித்தல் மற்றும் பார்வைக் குறைபாடுள்ள பிள்ளைகளின் பார்வைப் பரிசோதனை அறிக்கைகளை வாசித்தல் தொடர்பான ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டம், உள்ளடக்கக் கல்வி தொடர்பாக விசேட கல்வி நிபுணர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பொதுநலவாய வேலைத்திட்டம், பிரெயில் மற்றும் சைகை மொழிக்கான விசேட ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டம், விசேட கல்வி ஆசிரியர்களுக்கான உள்ளடக்கக் கல்வியை நோக்கிய ஆசிரியர் வழிகாட்டி 1 மற்றும் 2 பயிற்சி வேலைத்திட்டம், அத்துடன் வலயக் கல்வி அலுவலகங்களில் மதிப்பீட்டுக் குழுக்கள் ஊடாக மதிப்பீட்டுச் செயன்முறையை நடைமுறைப்படுத்துதல் போன்றவை அவற்றில் அடங்குகின்றன. இந்நடவடிக்கைகளின் ஊடாக விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளுக்கு உள்ளடக்கக் கல்விக்கான வாய்ப்புகளை வழங்குதல், ஒருங்கிணைந்த கற்றல் நடவடிக்கைகளை (Joint learning activities) நடைமுறைப்படுத்துதல், விசேட கல்வி வசதிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு அருகிலுள்ள சாதாரண பாடசாலைகளுடன் இணைந்து கற்றல் நடவடிக்கைகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாம் பல பெற்றோர்களைச் சந்தித்துள்ளோம். குறிப்பாக, தாய்மார்களின் மனதில் காணப்படும் பிரதான வேதனை என்னவென்றால், எப்போதேனும் ஒரு நாள் பெற்றோர்கள் இல்லாதபோது இந்தப் பிள்ளைக்கு என்ன நடக்கும் என்பதாகும். கல்வி அமைச்சு என்ற வகையிலும் அரசாங்கம் என்ற வகையிலும் நாம் செய்யக்கூடிய பிரதான விடயம், மாற்றுத்திறன்களைக் கொண்ட பிள்ளைகளின் சுயாதீனத்தன்மையை அனைத்து வகையிலும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை நாட்டில் ஆரம்பிப்பதாகும் என நான் கருதுகின்றேன். அதற்காக கல்வித் துறையில் நாம் மேற்கொள்ளும் விசேட பணியாக, ஏதேனும் ஒரு வகையில் கல்வியின் ஊடாக இந்தப் பிள்ளைகளை வேலைவாய்ப்பொன்றில் ஈடுபடக்கூடிய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

குறிப்பாக, நாம் தொழிற்கல்வித் துறையில் வழங்கும் பயிற்சி மாத்திரமன்றி, வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களையும் வழங்குவது அவசியமாகும். தற்போது நாம் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி, விசேட தேவைகளைக் கொண்ட மற்றும் மாற்றுத்திறன்களைக் கொண்ட பிள்ளைகளுக்காக ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சில நிறுவனங்கள் ஏற்கனவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நடவடிக்கைகளை மேலும் விரிவான முறையில் முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த வருடம் நடைபெறவுள்ள Skill Expo நிகழ்வில், குறிப்பாக மாற்றுத்திறன்களைக் கொண்ட பிள்ளைகளின் திறன்கள் (Skills) தொடர்பான வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் குறித்து வேலைத்திட்டங்களை முன்வைத்து, அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று, சமூகப் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும் இவ்வாறான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பிள்ளைகளுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவது அவசியமாகும். அதற்காக குறிப்பிட்ட வருமான மட்டத்திற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று, பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதுடன், பல்கலைக்கழகங்களில் விடுதிகளை நிர்மாணிக்கும் போது மாற்றுத்திறன்களைக் கொண்ட பிள்ளைகளுக்கு வசதியாக அமையும் வகையில் அவற்றை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் ஊடகப் பிரிவு