பூட்டான் புத்தாக்க ஆய்வகத்தின் பிரதிநிதிகளை பிரதமர் சந்தித்தார்

தனது பூட்டான் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பூட்டான் பிரதமர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) என்பனவற்றால் 2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட பூட்டான் புத்தாக்க ஆய்வகம் (Bhutan Innovation Lab – BIL) பற்றிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.

பூட்டான் புத்தாக்க ஆய்வகமானது (BIL) பூட்டானின் தேசியப் புத்தாக்கத் திட்டமொன்றாகும் என்பதோடு, இது பூட்டான் பிரதமர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) என்பன இணைந்து நிறுவப்பட்ட ஒன்றாகும்.

பூட்டான் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் செயற்படும் இத்திட்டமானது, புத்தாக்கங்கள், தொழில்முனைவோர் திறன் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரச நிர்வாகத்தை உருமாற்றுதல், பொருளாதார அபிவிருத்தியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அரச கொள்கைகள் மற்றும் தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்ட ஏனைய பங்காளர்களை ஒன்றிணைக்கும் திட்டமாகச் செயற்படும் இவ்வாய்வகம், புதிய யோசனைகளைக் கருத்தாக்க நிலையிலிருந்து நடைமுறை நிலைக்கு அபிவிருத்தி செய்வதற்கு வசதியளிக்கிறது.

பூட்டான் பிரதமரால் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகளுக்காக நடைமுறை மற்றும் கண்டுபிடிப்பு மட்டத்திலான தீர்வுகளைக் கண்டறிவதற்குப் பூட்டான் புத்தாக்க ஆய்வகம் வழங்கும் பங்களிப்பு குறித்து இவ்விஜயத்தின்போது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பூட்டானின் பொருளாதார வழிகாட்டலைச் செயற்படுத்துதல், தொழில்முனைவோர் திறனை மேம்படுத்துதல் மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் அதன் பங்களிப்பு குறித்தும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.

புத்தாக்கங்கள் மற்றும் டிஜிட்டல் தீர்வினூடாக அரச சேவை வழங்கலை வினைத்திறனாக்குவதும், அரச நிறுவனங்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், வர்த்தக சமூகம் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்த்தல் ஆகியன பூட்டான் புத்தாக்க ஆய்வகத்தின் நோக்கங்களாகும்.

பூட்டான் புத்தாக்க ஆய்வகத்தினால் (BIL) நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களைச் செயற்படுத்தும்போது பூட்டான் எதிர்கொள்ளும் பிரதான சவால்கள் மற்றும் அங்குள்ள வாய்ப்புகள் குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினரால் கவனம் செலுத்தப்பட்டது. கண்டுபிடிப்பு பொறிமுறைகளினூடாகப் பொருளாதார உருமாற்றம், அரச துறையின் கண்டுபிடிப்பு மற்றும் இளம் தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பங்களிக்கக்கூடிய விதம் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சித்ரா சமூகப் புத்தாக்க ஆய்வகத்தின் (Citra Social Innovation Lab) வாயிலாக இலங்கை பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பிலும் இலங்கைத் தூதுக்குழுவினரால் இங்கு கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. சித்ரா சமூகப் புத்தாக்க ஆய்வகமானது தற்போது இலங்கை பிரதமர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) என்பன இணைந்து செயற்படுத்தும் கூட்டுத் திட்டமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் பூட்டான் அமைச்சரவைச் செயலாளர், பூட்டான் பிரதமர் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகங்கள், பூட்டானின் UNDP பிரதிநிதிகள் மற்றும் பூட்டான் புத்தாக்க ஆய்வகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு