’தித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த இடங்கள் உட்பட எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இருப்பினும் குறித்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட மனித வளத்தைப் பெற்றுக்கொள்வதே தற்போது எழுந்துள்ள சவாலாக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜூன் 19 ஆம் திகதி மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது, கண்டி நகரில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கண்டியில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர்களான அதிவணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி நாயக்க தேரர் மற்றும் அதிவணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம நாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்காவின் சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஞானரத்தன மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் ஆகியோரையும் பிரதமர் சந்தித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் தற்போதைய நிலை குறித்து தேரர்களுக்கு விளக்கமளித்ததோடு, நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக எதிர்காலத்தில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவிருப்பதாகவும், நடைபெற்ற ஆசிரியர் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நடைமுறைப் பரீட்சைக்குப் பின்னர் உடனடியாகப் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு