எதிர்காலச் சந்ததியினரின் அறிவை வளர்த்து, விழுமியங்கள் நிறைந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் தொழிற்படும் ஆசிரியர் சமூகத்தினர் அனைவருக்கும் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நவீன உலகிற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு மத்தியில், காலமாற்றத்திற்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு, பிள்ளைகளுக்குப் புதியதொரு பாதையைக் காட்டுவதற்கு நீங்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
ஆசிரியத் தொழில் என்பது வெறுமனே ஊதியத்துக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒரு தொழில் அல்ல, அது உளப்பூர்வமான அர்ப்பணிப்புடனும் அன்புடனும் ஆற்றப்படும் மகத்தான சேவையாகும்.
எனவே, கல்விக் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும் ஆசிரியத் தொழிலின் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கும் எமது அரசாங்கத்தினால் பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, பட்டதாரிகளையும் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளையும் முறைப்படி ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன், சட்டரீதியான பிரச்சினைகளையும் சேவைப் பிரமாணக் குறிப்புகள் சார்ந்த பிரச்சினைகளையும் தீர்த்து, ஆட்சேர்ப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதேபோன்று, சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், தரமுயர்வுத் தாமதங்களைத் தவிர்த்தல், வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகளை முறைப்படி நடத்துதல், அதிபர் சேவையிலும் ஆசிரியக் கல்வியியலாளர் சேவையிலும் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் ஆகியவை தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் கல்வி அணுகுமுறைகளுக்கு அமைவாக ஆசிரியர்களின் தகவல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கும், தொழில்சார் பயிற்சிகளை நவீனமயமாக்கி அவர்களின் தொழில்சார் தகைமையை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதற்கும், வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்கி உலகளாவிய நவீன தொழில்நுட்பங்களுடன் அவர்களை இணைப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
பாடசாலை நேரத்துக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் மாத்திரம் முடங்கிவிடாது, பிள்ளைகளின் சவால்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறன்களை வெளிக்கொணர்வதற்காக நீங்கள் ஆற்றும் இணையற்ற சேவை, பெருமைமிக்க எதிர்காலச் சந்ததிக்கு அடித்தளமிடும் மகத்தான அர்ப்பணிப்பாகும்.
மாறி வரும் கல்வி முறைமையைப் பலமாகக் கொண்டு, பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கப் பாடுபடும் அனைத்து ஆசிரியர்களும் இதுவரை ஆற்றி வரும் சேவையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு வலிமையும் துணிவும் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன். அத்துடன், கல்விக்கான புதியதொரு சமூக உரையாடலை ஆரம்பிப்பதற்கு முன்வருமாறு உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு