புத்த பெருமான் அருளிய போதனைகளுக்கமைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்ட, பௌதீக பூசைகளை விடப் பௌத்த கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற அர்த்தமுள்ள வெசாக் பண்டிகையாக இந்த வெசாக் பண்டிகை அமைய வேண்டும் என இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் பிரார்த்திக்கின்றேன்.
வெளி உலகை ஒளிபெறச் செய்வதைப் போலவே, எமது இதயங்களையும் அன்பு, கருணை, அறிவு ஆகியவற்றைக் கொண்டு ஒளிபெறச் செய்வதற்கு இந்த வெசாக் காலத்தை ஒரு சந்தர்ப்பமாக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். பேராசை, வெறுப்பு, மடமை ஆகிய தீய குணங்கள் அகன்று, சாந்தியையும் சமாதானத்தையும் மேலோங்கச் செய்யும் புண்ணியகரமான காலப்பகுதியாக இதனை நாம் மாற்றிக்கொள்வோம்.
"அபித்தரெத கல்யாணே" பொது நலனுக்காகத் தாமதமின்றி அணிதிரள்வோம் எனும் இம்முறை அரச வெசாக் விழாவின் கருப்பொருளானது, காலத்தின் சமூகத் தேவையை மிகத் தெளிவாகச் சித்தரிக்கின்றது. தனிப்பட்ட குறுகிய நோக்கங்களிலிருந்து விலகி, பொது நலனுக்காக அர்ப்பணிக்கின்ற, தருமத்தினால் பிரகாசிக்கின்ற ஒரு நாட்டை உருவாக்கிக்கொள்வதற்கு இந்த வெசாக் விழாவை நாம் ஓர் ஆசீர்வாதமாகவும் சக்தியாகவும் கொள்ள வேண்டும்.
அதிவணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்களினதும், அகில இலங்கை சாசனாரட்சக சபையினதும் அறிவுரைகளுக்கமைய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்யும் அரச வெசாக் மகோற்சவம் எல்லா வகையிலும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.
அரசாங்கத்திற்கும் பௌத்த தர்மத்திற்கும் இடையே நிலவும் ஆழமான பிணைப்பினால், தார்மீக ஆட்சியின் மூலம் நாட்டின் அபிவிருத்தியையும் செழிப்பையும் ஏற்படுத்த முடியும். இனம், மதம், குலம் எனும் பேதங்களற்ற, அனைவருக்கும் நீதி கிடைக்கப்பெறும், "அனைத்து உயிர்களும் நலமாக இருக்கட்டும்" என்ற உன்னத கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாக, நாம் எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் சமூக சவால்களை வெற்றி கொள்வதற்குத் தேவையான பொறுமையைக் கடைப்பிடிப்பது இங்கு மிகவும் இன்றியமையாததாகின்றது.
தீவிரவாதத்தைத் தவிர்ந்து, நடுநிலைப் பாதையில் பயணிக்கும், இயற்கை மற்றும் சூழல்நேய வெசாக் கொண்டாட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரிடமும் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன். கொள்கைகளைப் போற்றும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம்!
உங்கள் அனைவருக்கும் புண்ணியகரமான வெசாக் பண்டிகை நல்வாழ்த்துகள்!
கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 மே 30 ஆம் திகதி
