இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் (OPA) பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (08) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பல்வேறு துறைகளிலும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நேரடியாகவே தொழில்சார் ஆலோசனைகளை வழங்குவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கத் தாம் எதிர்பார்ப்பதாகவும், விவசாயம், கட்டுமானத்துறை, மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களுக்கு, அந்தந்த தொழில்சார் சங்கங்களின் ஊடாக முன்கூட்டிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் (Pre-advice) வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த OPA நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் தொழில்சார் மட்டத்தை மேம்படுத்துவதற்கும் தேசிய அபிவிருத்திக்குமாக தொழில்சார் வல்லுநர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், நாட்டினுள் தொழில்சார் தகைமையினையும் தேசிய பணியினையும் மேலோங்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர், உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு