BIMSTEC பொதுச் செயலாளர் பிரதமரைச் சந்தித்தார்

2027 ஜனவரி மாதத்தில் தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்யவுள்ள BIMSTEC பொதுச் செயலாளர் திரு. இந்திர மணி பாண்டே, 2026 நவம்பர் 11ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

பொதுச் செயலாளரை வரவேற்ற பிரதமர், அவரது பதவிக்காலத்தில் பிம்ஸ்டெக் அமைப்பை வலுப்படுத்துவதற்காக ஆற்றிய சேவைகளையும் வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார்.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பொதுச் செயலாளர், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், மனிதவள அபிவிருத்தி ஆகிய துறைகளில் புதிய நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விளக்கமளித்தார். அத்துடன், பிம்ஸ்டெக் அமைப்புக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்குத் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு பொறிமுறையாகப் பிம்ஸ்டெக் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குப் பங்காண்மைகளை விரிவுபடுத்துவதுடன், பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான தொடர்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். உறுப்பு நாடுகளுக்கு இடையிலும் உலகின் ஏனைய பிராந்தியங்களுடனும் நிபுணத்துவ அறிவைப் பரிமாறிக்கொள்வதன் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் அவசியத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த ஆகியோருடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு