பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன். ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025ஆம் ஆண்டினை எண்ணி ஒருபுறம் நாம் மகிழ்ச்சியடைய முடியும். புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற வினைத்திறன் மிக்க அரச சேவைக்கான அடித்தளத்தை அமைக்கவும் எம்மால் முடிந்துள்ளதென நான் நம்புகிறேன்.

பொருளாதார ஸ்திரத்தன்மை, சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டு வரும் நேர்மறையான கண்ணோட்டம், வெளிப்படைத்தன்மை மிக்க ஆட்சி முறைமை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியமை போன்ற பல பிரதான துறைகளின் ஊடாக 2025ஆம் ஆண்டைப் பற்றி நாம் திருப்தியடையலாம்.

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எதிர்கொள்ள நேர்ந்த துரதிர்ஷ்டவசமான இயற்கை அனர்த்தம், எமது நாட்டிற்குச் சவாலானதொரு காலப்பகுதியாக அமைந்தது. அது நம் அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்திய போதிலும், அத்தகைய இக்கட்டான தருணத்திலும் இலங்கையர்களாக நாட்டு மக்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், மனிதாபிமானம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிய விதம் குறித்து இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றது. அந்தச் சவால்களை வெற்றிகொண்டு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி, சீர்குலைந்த அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உறுதியான அர்ப்பணிப்புடனேயே 2026ஆம் ஆண்டிற்குள் நாம் கால்பதிக்கின்றோம்.

கல்வித் துறையில் தரமான, அதேநேரம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற,கல்வித்துறையின் மாற்றம், அரச சேவை உட்பட அனைத்துத் துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கல், சாத்தியமான புதிய எண்ணக்கருக்களைக் கொண்ட முயற்சியாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் உலகளாவிய ரீதியில் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குதல், போதைப்பொருள் அற்ற - சுற்றாடலை நேசிக்கும் - மனிதாபிமானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பல சிறப்பான நோக்கங்களுடன், இன, மத மற்றும் கட்சிப் பேதங்களற்ற பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் இந்நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருக்கின்றது என்பதை இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன்.

கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த வெற்றிகரமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு.
2026 ஜனவரி 01 ஆம் திகதி

Download Release