விசேட சூழ்நிலையாகக் கருதி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கொழும்பிலுள்ள கால்வாய்கள் மற்றும் வடிகாலமைப்புகளை விரைவாகச் சுத்திகரியுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

எதிர்வரும் காலத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மழைநீர் வழிந்தோடுவதைச் சீராக்குவதற்காகக் கால்வாய்கள் மற்றும் வடிகாலமைப்புகளை விரைவாகச் சுத்திகரிக்க வேண்டும் என்றும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அச்சுத்திகரிப்புப் பணிகளை நிறைவுசெய்து, தொடர்ந்தும் பேணிச் செல்ல வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நாரஹேன்பிட்டவிலுள்ள கொழும்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு பிரதேச செயலகங்கள், விவசாய அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றினால் வடிகாலமைப்புகள் மற்றும் கால்வாய்களைச் சுத்திகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதுடன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் திட்டமிடல், மதிப்பீடுகளைத் தயாரித்தல் தொடர்பில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

கொழும்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இங்கு கவனம் செலுத்தியது. இதன்கீழ், கிராமிய வீதி அபிவிருத்தி, சமூக வலுவூட்டல், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் விளையாட்டுக் கலாசாரமொன்றை உருவாக்குதல் ஆகிய பிரதான துறைகளின்கீழ் அமையும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

இதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டத்தின்கீழ் கொழும்பு, திம்பிரிகஸ்யாய, கோட்டே, ஹோமாகம, பாதுக்க மற்றும் கெஸ்பேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், இரண்டாம் கட்டத்தின்கீழ் கெஸ்பேவ, மகரகம, தெஹிவளை, ரத்மலானை, மொறட்டுவை மற்றும் கொலன்னாவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதேவேளை, 2025ஆம் ஆண்டின் வேலைத்திட்டத்தின்கீழ் திம்பிரிகஸ்யாய, கொலன்னாவ மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் ஏற்கனவே முழுமையாக நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வறுமையை ஒழிப்பதற்கான “பிரஜா சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் 2026ஆம் ஆண்டுக்காக 1,117.53 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1,108.00 மில்லியன் ரூபாய் 13 பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய தொகை விசேட திட்டங்களுக்காகச் செலவிடப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக விவசாயம், நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும் சிறிய அளவிலான வியாபாரங்களுக்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

அனர்த்தத் தணிப்புத் திட்டங்களின்கீழ் ஹோமாகம, சீதாவக்க மற்றும் மகரகம ஆகிய பிரதேசங்களில் ஆறுகளைச் சுத்திகரித்தல் மற்றும் பாதைகளை அபிவிருத்தி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விளையாட்டுக் கலாசாரமொன்றை உருவாக்குவதற்காகப் பாடசாலை மற்றும் பொது விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கு 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 39 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டு, தெஹிவளை, மகரகம, ஹோமாகம மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய பிரதேசங்களிலுள்ள விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

இதுதவிர, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக விகாரைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டடங்களை அபிவிருத்தி செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் பரவலாக்கப்பட்ட மூலதன வரவுசெலவுத் திட்டத்தின்கீழ் 184,775 பயனாளிக் குடும்பங்களுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொத்தத் திட்டங்களின் எண்ணிக்கை 281 ஆகும். இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதி 217.38 மில்லியன் ரூபாயாகும். இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீடாக 180.00 மில்லியன் ரூபாயும், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீடாக 37.38 மில்லியன் ரூபாயும் அடங்குகின்றன. இத்திட்டங்களின் மொத்த மதிப்பீட்டுச் செலவு 217.03 மில்லியன் ரூபாயாகும்.

அங்கீகரிக்கப்பட்ட 281 திட்டங்களின் பௌதிக முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்ளும்போது, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்ற அல்லது தயாரிக்கப்பட வேண்டிய 8 திட்டங்களும், மதிப்பீடுகள் தயாரித்து முடிக்கப்பட்ட 5 திட்டங்களும், கேள்விப்பத்திரங்கள் பெறப்பட்ட 21 திட்டங்களும், மதிப்பீட்டு மட்டத்திலுள்ள 9 திட்டங்களும், ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள 17 திட்டங்களும் காணப்படுகின்றன. மேலும், பணிகள் ஆரம்பிக்கப்பட்ட அல்லது 25% வரை நிறைவுற்ற 51 திட்டங்களும், 25% முதல் 50% வரை நிறைவுற்ற 9 திட்டங்களும், 50% முதல் 75% வரை நிறைவுற்ற 7 திட்டங்களும், 75% முதல் 99% வரை நிறைவுற்ற 17 திட்டங்களும், பௌதிக ரீதியாக 100% நிறைவுசெய்யப்பட்டுக் கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டிய 93 திட்டங்களும், பௌதிக ரீதியாகவும் நிதி ரீதியாகவும் முழுமையாக நிறைவுற்ற 44 திட்டங்களும் உள்ளமை இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

நிதி முன்னேற்றத்தின்படி, மொத்தத் திட்டச் செலவு 21.647 மில்லியன் ரூபாயாகவும், நிர்வாகச் செலவு 0.334 மில்லியன் ரூபாயாகவும், மொத்தச் செலவு 21.981 மில்லியன் ரூபாயாகவும் காணப்படுகிறது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணாராச்சி, சமன்மலீ குணசிங்க, உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு