கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் அவர்களின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் இரங்கலைத் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜூலை 16 காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மீண்டும் நாடு திரும்பினார்.
கட்டார் நாட்டிற்கு மேற்கொண்ட இவ்விஜயத்தின் போது, தோஹாவிலுள்ள லுஸைல் அரண்மனைக்கு (Lusail Palace) சென்று தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல்-தானி (HH the Amir Sheikh Tamim bin Hamad Al-Thani) அவர்களைச் சந்தித்துத் தனது இரங்கலைத் தெரிவித்த பிரதமர், அதனைத் தொடர்ந்து அல் வஜ்பா அரண்மனைக்கு (Al Wajba Palace) சென்று கட்டார் நாட்டின் அமீரின் தாயாரும் கட்டார் அறக்கட்டளையின் (Qatar Foundation) தலைவியுமான ஷேக்கா மோசா பின்ட் நாசர் (Her Highness Sheikha Moza bint Nasser) அவர்களிடமும் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, காலஞ்சென்ற முன்னாள் அமீர் அவர்களின் (Father Amir) மகள்மார்களான இளவரசி ஷேக்கா அல் மயஸ்ஸா பின்ட் ஹமட் அல் தானி (Her Excellency Sheikha Al Mayassa bint Hamad Al Thani), இளவரசி ஷேக்கா ஹிந்த் பின்ட் ஹமட் அல் தானி (Her Excellency Sheikha Hind bint Hamad Al Thani) ஆகியோருக்கும், அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும், கட்டார் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப விவகாரங்கள் அமைச்சர் புதைனா பின்ட் அலி அல் ஜபர் அல் நுஜைமி (Buthaina bint Ali Al Jabr Al Nuaimi) அவர்களுக்கும் இலங்கை சார்பாகத் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு