அனர்த்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட மனிதநேயத்தின் வலுவான பிணைப்பு, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியிலும் மிகவும் அவசியமானதாகும்
’டித்வா’ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை நாம் இன்னும் நிறைவு செய்யவில்லை. — பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன
’டித்வா’ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது இந்நாட்டு மக்கள் வெளிப்படுத்தும் மனிதநேயப் பிணைப்பு, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியிலும் வலுவாகப் பேணப்படுவது மிகவும் முக்கியமான விடயமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
’டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உயிரிழந்த மற்றும் காணாமல் போன மக்களை நினைவுகூரும் வகையில் நவம்பர் 26ஆம் திகதி பதுளை வரலாற்றுச் சிறப்புமிக்க முதியங்கனை ரஜமஹா விகாரையில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஊவா மாகாண சபையும் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டச் செயலகங்களும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதனையொட்டி, உயிரிழந்த மற்றும் காணாமல் போன மக்களை நினைவுகூர்ந்து நடைபெற்ற இரவு முழுவதும் இடம்பெற்ற பிரித் பாராயண புண்ணிய நிகழ்விலும் பிரதமர் கலந்துகொண்டார். அத்துடன், ’டித்வா’ அனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து பிரதமர் மலரஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, பிரதமர் வரலாற்றுச் சிறப்புமிக்க முதியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், சியாம் மகா நிகாயாவின் அஸ்கிரிய பீடத்தின் பிரதி பதிவாளருமான சங்கைக்குரிய கலாநிதி முருத்தெணியே தம்மரதன தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அத்துடன், ’டித்வா’ அனர்த்தத்தின் முதலாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் விசேட நினைவு முத்திரையொன்றும் பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், ’டித்வா’ அனர்த்தத்தின் பேரழிவுக்கு மத்தியிலும் இந்நாட்டு மக்களின் மனிதநேயம் சிதைவடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
தமது சொந்தத் துன்பங்களையும் சிரமங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மற்றொருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக முன்வந்து, அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வருகை தந்த பொதுமக்களின் அர்ப்பணிப்பைப் பிரதமர் பாராட்டினார்.
குறிப்பாக, அனர்த்தத்தினால் குறைந்தளவு பாதிப்புக்குள்ளான மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், கண்டி, பதுளை மற்றும் புத்தளம் போன்ற கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வருகை தந்து, பல நாட்கள் அங்கு தங்கியிருந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பை பிரதமர் நினைவுகூர்ந்தார். அத்துடன், அனைத்து அரச உத்தியோகத்தர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையிலும் மக்களுக்காக ஆற்றிய சேவையையும், தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
மேலும், கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள் இந்த அனர்த்தக் காலத்தில் பெரும் பலமாக இருந்து செயற்பட்ட விதத்தை மரியாதையுடன் நினைவுகூர்ந்த பிரதமர், வரலாற்றுச் சிறப்புமிக்க முதியங்கனை விகாரையின் ஊடாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை ஆற்றப்பட்ட மகத்தான சேவைக்கு நன்றியும் தெரிவித்தார். அனர்த்த காலத்தில் மட்டுமன்றி, நாட்டின் அபிவிருத்திப் பயணத்திலும் அனைத்து மக்களும் ஒருவரையொருவர் கருத்திற்கொண்டு கூட்டாகச் செயற்படுவதே ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கான மிகப்பெரும் பலமாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்,
“ஒரு அனர்த்தத்திற்குப் பின்னர் ஒரு நாட்டை மீளக் கட்டியெழுப்புவது என்பது அழிவடைந்த கட்டிடங்கள், வீதிகள் மற்றும் பாலங்களை மீண்டும் நிர்மாணிப்பது மட்டுமல்ல. சீர்குலைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் வலுப்படுத்துவது, தமது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது, மக்கள் இழந்த வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புவது, பிள்ளைகளின் கல்வியைத் தடையின்றித் தொடரச் செய்வது மட்டுமன்றி, மீண்டும் இவ்வாறானதொரு அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாத வகையில் மக்களுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதும் எமது பொறுப்பாகும்.
’டித்வா’ அனர்த்தத்தினால் நீங்கள் இழந்த அனைத்தையும் எம்மால் மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியாமல் போகலாம். இருப்பினும், உங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பலம், ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்காக நாம் எமது அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அது எமது பொறுப்பாகும். அந்தப் பொறுப்பிலிருந்து நாம் ஒருபோதும் விலகிச் செல்லமாட்டோம். இனம், மதம், மாகாணம் அல்லது வேறு எந்தவொரு வேறுபாடுமின்றி, உங்களுக்குத் தேவையான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களுடன் இருப்போம் என்றும், உங்களைக் கைவிடமாட்டோம் என்றும் மீண்டும் உறுதியளிக்கின்றோம்.”
இந்நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன பின்வருமாறு தெரிவித்தார்:
“கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ’டித்வா’ சூறாவளியின் தாக்கம் ஆரம்பித்தபோது, பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. நவம்பர் 26ஆம் திகதியன்றே ஜனாதிபதி அவர்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்றத்திற்கு அழைத்து கலந்துரையாடியதுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளைச் சில நாட்களுக்கு இடைநிறுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபடுவதற்காகத் தத்தமது பிரதேசங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதை என்னால் நினைவுகூர முடிகின்றது. அன்றிலிருந்து நாம் ஆரம்பித்த நிவாரணம் வழங்கும் செயற்பாடு இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அனர்த்தத்தினால் சுமார் முப்பது இலட்சம் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர். உயிர்கள் இழக்கப்பட்டன. வீதிப் போக்குவரத்து தடைப்பட்டது. வைத்தியசாலைகள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள், கைத்தொழில் நிறுவனங்கள் மட்டுமன்றி, மத வழிபாட்டுத் தலங்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டன. ஒட்டுமொத்த நாட்டினதும் இயல்பு வாழ்க்கை பாரியளவில் சீர்குலைந்தது.
எம்மால் இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும், உயிருடன் வாழும் மக்களுக்கு அவர்கள் இழந்தவற்றை மீளப் பெற்றுக்கொடுப்பதற்கு மட்டுமன்றி, அவர்கள் முன்னர் வாழ்ந்ததைவிடவும் சிறந்ததொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இதற்காக அரசாங்கம் திறைசேரியின் வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தது.
அதேவேளை, அரசியல் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களாகிய எம்மீது இன்னும் பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த அனர்த்தத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சந்தர்ப்பத்திற்குள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக எதிர்வரும் ஆண்டில் இதைவிடவும் அதிக அர்ப்பணிப்புடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும்.”
இந்நிகழ்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், சியாம் மகா நிகாயாவின் அஸ்கிரிய பீடத்தின் பிரதி பதிவாளருமான சங்கைக்குரிய கலாநிதி முருத்தெணியே தம்மரதன தேரர் உள்ளிட்ட கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினர், ஊவா மாகாண ஆளுநர் ஜே. எம். கபில ஜயசேகர, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, இலங்கை தபால்மா அதிபர் ருவன் சத்குமார, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலகல ஆகியோர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள், ’டித்வா’ அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு