நாட்டின் உண்மையான முதலீடு பிள்ளைகளின் கல்வியும் ஆளுமை விருத்தியுமே ஆகும். சுற்றாடலை நேசிக்கும், ஆளுமைமிக்க பிள்ளைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
நாட்டின் உண்மையான முதலீடு பிள்ளைகளின் கல்வியும் ஆளுமை விருத்தியுமே என்றும், சுற்றாடலை நேசிக்கும் ஆளுமைமிக்க பிள்ளைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தெற்காசியாவின் மிகப் பெரிய இளஞ்சிவப்புப் படிகக்கல் மலைத்தொடரையும், மிகப் பெரிய நாகவனத்தையும் கொண்ட தேசிய நாமல் உயனையின் 36ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது:
“நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டதும், தனித்துவமான பல்லுயிர்ப் பல்வகைமையையும் சுற்றுலா ஈர்ப்பையும் பெரும் கல்விசார் பெறுமதியையும் உடையதுமான நமது தேசிய நாமல் உயனையை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்குத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த வணக்கத்துக்குரிய வனவாசி ராகுல நாயக்க தேரருக்கும், அவரது அந்த உன்னத முயற்சிக்குப் பக்கபலமாக இருந்த அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பில் எனது கௌரவத்தை முதலில் உரித்தாக்குகின்றேன்.
உலகின் எந்தவொரு நாட்டிலும் உண்மையான முதலீடு என்பது கட்டப்படும் கட்டடங்களில் இல்லை. நாட்டின் உண்மையான முதலீடு நமது பிள்ளைகளின் கல்வியிலும் அவர்களது ஆளுமை விருத்தியிலுமே உள்ளது.
பரீட்சைகளுக்கு மட்டும் வரையறுக்கப்படாமல், சுற்றாடலை நேசிக்கும், முழுமையான ஆளுமையுடைய பிள்ளையை உருவாக்குவதற்காகவே நாம் புதிய கல்விச் சீர்திருத்தங்களை ஆரம்பித்துள்ளோம்.
சுற்றாடல் பாதுகாப்பை நாம் வெறும் வார்த்தைகளுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை; பல நடைமுறைசார்ந்த தீர்மானங்களையும் எடுத்துள்ளோம். 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய சுற்றாடல் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடிந்தது. இதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களின் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டை நாம் மேலும் வலுப்படுத்தியுள்ளோம்.
அபாயகரமான கழிவுகளைச் சூழலில் கலந்து, நமது இயற்கையை அழிப்பவர்களுக்கு எதிராக 20 மில்லியன் ரூபாய் வரையிலான அபராதத் தொகையும் சிறைத்தண்டனையும் விதிக்கும் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். அதேபோன்று, பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்களை அழிப்பவர்களுக்கு எதிராக 1 மில்லியன் ரூபாயிலிருந்து 10 மில்லியன் ரூபாய் வரை அபராதத் தொகை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாம் நடைமுறைப்படுத்திய நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டத்தின் காரணமாக, இன்று நாமல் உயனையைச் சூழவுள்ள மக்களுக்குத் தூய்மையான குடிநீரை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.
நமது எதிர்காலச் சந்ததியினருக்காகச் சூழலையும் பிள்ளைகளின் கல்வியையும் பாதுகாத்துக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்” எனப் பிரதமர் தெரிவித்தார்.
இங்கு ஆசியுரை வழங்கிய தேசிய நாமல் உயனையின் நிறுவுநர் வணக்கத்துக்குரிய வனவாசி ராகுல தேரர்,
“இந்த நாமல் உயனையைப் பாதுகாப்பதற்கு அளப்பரிய பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சுற்றாடலைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும். நான் அரசியல் பற்றிப் பேசப் போவதில்லை; எவ்வாறாயினும், இப்போது அரசாங்க அதிகாரிகள் எமது தொலைபேசி அழைப்புகளுக்குச் செவிமடுக்கிறார்கள்; அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எமக்குச் செவிமடுக்கிறார்கள். அது ஒரு பெரிய விடயம். இன்று நமது பிரதமர் இங்கு வருகை தந்துள்ளமையால், நான் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன். ஒன்று, கல்கிரியாகம பிரதேச வைத்தியசாலையைக் கட்டித் தருமாறு, மற்றையது, ஆண்டியாகல பாடசாலையை அபிவிருத்தி செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.”
அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ:
“வணக்கத்துக்குரிய வனவாசி ராகுல தேரர் தேசிய நாமல் உயனையின் நிறுவுநர் மட்டுமன்றி, அதன் பாதுகாவலரும் ஆவார் என்று கூறினால் அது மிகையாகாது.
சுற்றாடலைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும். அதேபோன்று, கல்கிரியாகம பிரதேச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யுமாறு நீங்கள் கோரிக்கை விடுத்தீர்கள்; அந்தக் கோரிக்கையை நாம் நிறைவேற்றுவோம். வைத்தியசாலையில் நிலவும் வெற்றிடங்களை எதிர்கால ஆட்சேர்ப்புகள் மூலம் நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுப்போம். அதேபோல, எமது அரசாங்கம் கல்விக்கு விசேட இடமளித்துள்ளது; அதனால்தான் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 500 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் பாடசாலைகளில் ஆடியாகல பாடசாலையும் உள்ளடங்குகின்றது. எனவே, அந்தப் பாடசாலையையும் எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.”
வணக்கத்துக்குரிய வனவாசி ராகுல தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும், அமைச்சர் வசந்த சமரசிங்கவும், பாராளுமன்ற உறுப்பினர் திலிண தாருகவும், பிரதேச சபைத் தவிசாளர் ஜீ.கே. பண்டார உள்ளிட்ட உள்ளூராட்சிப் பிரதிநிதிகளும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியும், கொரியப் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும், பெருந்திரளான பிரதேசவாசிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு