முன்பள்ளித் துறைசார்ந்த எவரையும் புறக்கணிக்காது அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களது தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாத்து அதனை ஒரு மூடிய சேவையாக மாற்றி அமைப்பதே எமது நோக்கமாகும்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

முறையற்ற ஆரம்பப் பருவக் கல்வி முறையை மாற்றி, இத்துறையின் தரம் மற்றும் தொழில்சார் தகைமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நேரடியாகத் தலையிடும் என்றும், முன்பள்ளித் துறைசார்ந்த எவரையும் புறக்கணிக்காது அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

"வளரும் குழந்தை உலகிற்கு - சூரியக் கதிராகும் இனிய குடும்பம்" எனும் கருப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 2026 தேசிய ஆரம்பப் பருவக் குழந்தைப்பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வாரத்தின் மூன்றாவது நாளை முன்னிட்டு, ஆரம்பப் பருவக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்காக அலரி மாளிகையில் இன்று (16) நடைபெற்ற தேசிய நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 600க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்பள்ளிக் குழந்தையின் சமூக மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அபிவிருத்திக்கும், சமூகமயமாக்கலுக்கும் அவசியமான ஊட்டமளிக்கும் சூழலை உருவாக்குவதில் ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் பங்களிப்பு குறித்த புத்திஜீவிகளின் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய பிரதமர்,

குழந்தையின் எதிர்காலம், ஆளுமை மற்றும் அவர்கள் உலகைப் பார்க்கும் விதம் ஆகியவை தீர்மானிக்கப்படும் மிக முக்கியமான காலகட்டம் ஆரம்பப் பருவமாகும். தற்போது காணப்படும் சில ஒழுங்கமைப்பற்ற மற்றும் முறையற்ற ஆரம்பப் பருவக் கல்வி முறையை மாற்றி, இத்துறையின் தரம் மற்றும் தொழில்சார் தகைமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நேரடியாகத் தலையிடும்.

ஆரம்பப் பருவக் கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டியதுடன், அதனை கல்விச் செயற்பாட்டின் முதற்கட்டமாக அடையாளங்கண்டு தேசிய கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது, தற்போது ஆரம்பப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளிகளை நடத்திச் செல்லும் எந்தவொரு ஆசிரியரையும் நீக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது. மாறாக, அவர்களை சமமான தகைமைகளைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட தொழில் வல்லுநர்களாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

குறிப்பாக, இயலாமையுள்ள மற்றும் ’நரம்பியல் பன்முகத்தன்மை’ (Neurodivergence) எனும் பல்வேறு கற்றல் வேகங்கள் மற்றும் மன ரீதியான பன்முகத்தன்மை கொண்ட குழந்தைகளைப் பொதுச் சமூகச் செயற்பாடுகளுக்குள் உள்வாங்குவது மிகவும் முக்கியமானது. அது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

குழந்தைகள் இருக்கும் இடங்களில் கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாதிருப்பது கவலைக்குரிய நிலையாகும். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

பல்வேறு தடங்கல்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் முன்பள்ளி ஆசிரியர்களும் காப்பாளர்களும் ஆற்றும் சேவையைப் பாராட்ட வேண்டும். முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களின் தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் தெரிவித்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உரையாற்றுகையில்,

ஒரு குழந்தையின் வாழ்நாளின் முதல் ஐந்து வருடங்களில் மூளையின் வளர்ச்சி தொண்ணூறு சதவீதம் (90%) பூர்த்தியடைகிறது. அக்காலப்பகுதியில் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற அனுபவங்களும் திறன்களும் அவர்கள் பெரியவர்களானதும் அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அடித்தளமாக அமைகின்றன.

’குழந்தைகள் எதிர்கால உலகிற்குச் சொந்தமானவர்கள் என்பதால், அவர்களைச் சரியான இலக்குகளை நோக்கி வழிநடத்த பெரியவர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும்’ என்று கவிஞர் கலீல் ஜிப்ரான் தனது கவிதையொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேபோன்று, இதுவரை காலமும் அரசாங்கத்தின் முறையான கட்டமைப்புக்கு உட்படுத்தப்படாமல் சுயதொழிலாகக் கருதப்பட்டு வந்த முன்பள்ளிச் சேவையை, அரசாங்கம் பொறுப்புக்கூறும் உத்தியோகபூர்வ தொழில்சார் கட்டமைப்பைக் கொண்ட ஒரு ’மூடிய சேவையாக’ மாற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மூலம் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சேவையானது உங்களால் ஆரம்பிக்கப்பட்டு உங்களாலேயே முடிவடையக்கூடிய ஒரு சேவையாகவே இருந்து வருகிறதே தவிர, இது அரசாங்கத்தினால் பொறுப்பளிக்கப்படும் அல்லது நியமன அதிகாரம் கொண்ட உத்தியோகபூர்வ தொழில் துறையாக இதுவரை மாற்றப்படவில்லை.

அதேபோல், உங்களது சேவைக் கால முடிவில் அதனை முடித்து வைப்பதற்கோ அல்லது ஓய்வுபெறச் செய்வதற்கோ எவரும் நடவடிக்கை எடுப்பதில்லை. நாம் இதில் தலையிட்டு, ஆசிரியர் சேவையைப் போன்றே உங்களையும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் வல்லுநர்களாக மாற்றுவதற்கான பணிகளைத் தயார் செய்து வருகின்றோம். தற்போது இத்துறையில் உள்ள எவரையும் புறக்கணிக்காது அவர்களின் தொழில்சார் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் திருமதி ஹேமாலி வீரசேகர, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி தரங்கனி விக்கிரமசிங்க, வெளிநாட்டுத் தூதுவர்கள், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்தர அதிகாரிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் வருகை தந்த பெருமளவிலான முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு