பொருளாதார உரிமைகளுக்கான மகளிர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலர் அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர். நாட்டின் பல பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாய பெண்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் சிலரும் இவ்வாறு பிரதமரை சந்தித்து அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கும் தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
வவுனியா, மொனராகலை, பொலன்னறுவை, பொகவந்தலாவை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த விவசாய பெண்கள் அமைப்புக்களின் தலைவிகள் சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். பல வருடங்களாக அவர்கள் முகம்கொடுத்து வரும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பொருளாதார உரிமைகளுக்கான மகளிர் ஒன்றியம் சார்பாக சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை (Law & Society Trust) இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
நுண்கடன் நெருக்கடி மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பில் இதன்போது பிரதானமாக கலந்துரையாடப்பட்டதுடன், விவசாய பெண்களுக்கென காணி உரிமைகளை வழங்கும் போது காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள், மலையக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் காணி, வீடு மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலான பிரச்சினைகள் உட்பட விசேட விதமாக பெண்களை பாதிக்கும் நடைமுறை சமூகப் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் ஊடாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
இதன்போது முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் தமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டதாகவும், அவற்றை தீர்ப்பதற்கு தேவையான கொள்கைகளை திட்டமிடுவது குறித்து எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படுமெனவும் பிரதமர் தெரிவித்தார். விவசாய பெண்கள் தமது பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வாக முன்வைத்துள்ள யோசனைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் பிரதமரிடம் இதன்போது கையளித்தனர்.
’உணவு கட்டமைப்பை பரிணாமமடையச் செய்யும் மகளிர்’ என்ற தொனிப்பொருளின் கீழ் சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை ஏற்பாடு செய்த தேசிய விவசாய பெண்கள் மாநாடு 29ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. மாநாட்டின் பிரதம அதிதியாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி கலந்துகொண்டார். பொருளாதார உரிமைகளுக்கான மகளிர் ஒன்றியத்தின் உறுப்பினர்களினால் குறித்த யோசனைகள் மாநாட்டின் போது பிரதமரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
பிரதமர் ஊடக பிரிவு