மதப் பணிகளுடன் மாத்திரம் நின்றுவிடாது அளப்பரிய சேவையாற்றிய - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனுநாயக்க தேரரின் மறைவு சமூகத்திற்குப் பேரிழப்பாகும்

இன, மத பேதமின்றி அனைவருக்கும் கருணை காட்டி, மதப் பணிகளுடன் மாத்திரம் நின்றுவிடாது அளப்பரிய சேவையாற்றிய மறைந்த அதிவணக்கத்துக்குரிய கெப்பெட்டியாகொட சிறிவிமல அனுநாயக்க தேரரின் மறைவு, முழு இலங்கைச் சமூகத்துக்குமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் அனுநாயக்கரும், கண்டி, கெட்டம்பே ராஜோபவனாராமத்தின் விகாராதிபதியுமான அதிவணக்கத்துக்குரிய கெப்பெட்டியாகொட சிறிவிமல அனுநாயக்க தேரரின் இறுதிக்கிரியை நிகழ்வில், ஒக்டோபர் 21 ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அனுநாயக்க தேரரின் இறுதிக்கிரியை, கண்டி, கெட்டம்பே விளையாட்டு மைதானத்தில் அரச மரியாதையுடன் நடைபெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

"நீண்ட காலமாக புத்த சாசனத்தின் மறுமலர்ச்சிக்காகவும் சாசன ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்காகவும் அவர் மனவுறுதியுடனும் துணிவுடனும் பணியாற்றினார். ராமஞ்ஞ மகா நிகாயவின் அனுநாயக்க பதவியை வகித்து, நிகாயவின் உள்ளக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக அவர் வழங்கிய தலைமைத்துவமும், அவரது சாசனப் பணியும் அனைவருக்கும் முன்மாதிரியானவை.

மதப் பணிகளுடன் மாத்திரம் நின்றுவிடாது, இன, மத பேதமின்றி மக்களுக்கு உதவிய அவர், நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் மிக்க இடங்களைப் பாதுகாப்பதிலும் முன்னோடியாகச் செயற்பட்டார்.

சுனாமிப் பேரழிவு மற்றும் கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்துக்கு நிதியுதவி வழங்கி, மக்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்வதில் அவர் பங்காற்றியதுடன், சாசனப் பணியைப் போலவே சமூகப் பணிகளிலும் விசேட அக்கறையுடன் செயற்பட்டார்.

தேசிய மற்றும் சமய நெருக்கடிகளின்போது சரியான வழிகாட்டல்களை வழங்கி, சமூகத்தின் நலனுக்காக முன்நின்று செயற்பட்ட அவரது மறைவு, பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் புத்த சாசனத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவரது சுயநலமற்ற வழியைப் பின்பற்றுமாறு இளம் பிக்குகளிடமும் எதிர்காலச் சந்ததியினரிடமும் கேட்டுக்கொள்கிறேன்" என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த இறுதிக்கிரியை நிகழ்வில், இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் மகாநாயக்கரான அக்கமகா பண்டித அதிவணக்கத்துக்குரிய மகுலேவே விமல மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மூன்று நிகாயங்களையும் சேர்ந்த அனுநாயக்க தேரர்கள் அடங்கலான மகா சங்கத்தினரும், மத்திய மாகாண ஆளுநர் வைத்தியர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர்களான கமகெதர திஸாநாயக்க, வைத்தியர் ஹன்சக விஜேமுனி, வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ, மத்திய மாகாணப் பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க உள்ளிட்ட பெருந்திரளானோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு