ஏற்கனவே எண்ணூறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன... - பிரதமர் தினேஷ் குணவர்தன

பாடசாலைகளை பாதுகாப்பதில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்...

பாடசாலைகளை மூடுவதற்கு பதிலாக கல்வி அதிகாரிகள் பாடசாலைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு லிண்ட்சே பெண்கள் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ள வெள்ளவத்தை வைஷாக வித்தியாலயத்தின் புதிய மாத்திக மாதா கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இன்று (16.10.2023) இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

1935 ஆம் ஆண்டு திரு. ஈ.எஸ்.பெர்னாண்டோ அவர்களின் நிதி அன்பளிப்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைஷாக வித்தியாலயம் 2016 ஆம் ஆண்டுடன் மூடப்படும் பாடசாலையாக பெயரிடப்பட்டதுடன், அக்காலப்பகுதியில் ஸ்ரீ தேவி டி சில்வா என்ற தற்போதைய மாதிக மாதாவின் தலையீட்டில், அது புத்துயிர் பெற்று பம்பலப்பிட்டி லிண்ட்சே பெண்கள் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

இதுவரை மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை எண்ணூறு. இலங்கையில் கல்வித்துறையில் பதவிகளை வகிக்கும் அனைவரும் பாடசாலைகள் மூடப்படும் விடயம் தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டும். அரசாங்கத்திடம் இருந்து அதிக பாடசாலைகளை நாங்கள் பெற்றதில்லை. எமது மக்கள் மிகவும் சிரமப்பட்டுக் கட்டியெழுப்பிய பாடசாலைகளே அவர்களை இந்நாட்டின் கல்வித் துறையில் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அனைத்துப் பாடசாலைகளையும் ஒரு தேசியக் கல்வித் திட்டத்துக்காக ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ், கல்வித் துறையில் கிடைக்கும் அதிகபட்ச இடங்களின் உரிமையை எமது நாடு அடைந்துள்ளது. உலகில் அதிகமான சவால்களை வெற்றிகொள்ள நாம் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது.

ஈ. எஸ். பெர்னாண்டோ குடும்பம் வெள்ளவத்தையின் பெருமைக்குரிய குடும்பமாகும். வெள்ளவத்தை என்பது தேசத்தின் பெருமைக்குரிய அடையாளம். ஈ. எஸ். பெர்னாண்டோவைப் பற்றி நாம் நினைவு கூரும் போது, வைஷாக வித்தியாலயம் இவ்வளவு ஆழமான பெயருடன் உருவாகி இதனூடாக பல மாணவிகள் உயர்ந்த நிலைகளை அடைந்துள்ளனர். மூடப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வெள்ளவத்தை வைஷாக வித்தியாலயத்தை இந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு மாதிக மாதா ஷீல மாதாவின் இடைவிடாத முயற்சி மிகவும் பெறுமதியானது.

உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசு வென்ற பாப்லோ நெருடா, இலக்கியப் புகலிடமாக இருந்ததன் காரணமாக வெள்ளவத்தைக்கு ஈர்க்கப்பட்டார். வெள்ளவத்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பது ஒரு தேசமாகிய எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

பொறுப்புகள் மற்றும் கடமைகள் என்ற இரண்டு விடயங்கள் எமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளன. நாம் வகிக்கும் பதவியே எமது பொறுப்பு. கடமைகள் என்பது மனித சமுதாயத்தில் எமக்கு இருக்கும் கடமைகள். எனவே, இந்த பிள்ளைகள்தான் எம் நாட்டின் எதிர்கால சந்ததி. நாம் அதிக கடமைகளைச் செய்து எமது பொறுப்பு என்ற பங்கை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வளவு வெற்றிகரமான ஒரு பாடசாலை மூடப்படும் வரை பார்த்திருக்க முடியுமா? இது பாடசாலை நிர்வாகத்தினரை விழிப்பூட்டு ஒரு நிகழ்வு. பிரதமர் என்ற முறையில் இவற்றை நினைவுபடுத்துவது எனது கடமை. தொலைதூரப் பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு எமக்குக் வழங்கப்பட்ட எண்ணூறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுதான் நிலைமை.

கல்விக்காக ஏதேனும் ஒரு பெறுமதியான ஒன்று கிடைத்தால், கல்விக்காக அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றால், அதை ஆக்கப்பூர்வமாக பாடசாலையுடன் சேர்த்துக்கொள்வோம். மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர்களாக பிள்ளைகளை உருவாக்க முடிந்தால், நீங்கள் அவர்களது வாழ்வில் மற்றுமொரு அத்தியாயத்தை திறக்க உதவுகிறீர்கள். அவர்கள் ஐந்தாம் வகுப்பை விட்டு வெளியேறும் நேரத்தில், அவர்கள் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் திறன்களை வளரத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

சங்கைக்குரிய திருகுணாமலயே ஆனந்த மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், மாதிக மாதா ஷீல மாதா, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கல்வித் துறைசார்ந்தவர்கள், கொடைவள்ளல்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு