“எமது கிராமத்திலிருந்து உலகிற்கு” என்ற செய்தியை வழங்குவோம்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

லலித் அத்துலத்முதலி மன்றம், ஜனநாயகம் மற்றும் தலைமைத்துவத்திற்கான நிறுவனம் மற்றும் சுதந்திரத்திற்கான நௌமன் அமைப்பு (NAUMANN) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த லலித் அத்துலத்முதலி நினைவு தின உரை 2023.11.30 ஆந் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

லலித் அத்துலத்முதலி என்ற பெயரில் நினைவுகூரப்படுவது ஆழமான அர்த்தத்துடன் உண்மையான தேசப்பற்றுடன் தனது தாய்நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்த இலங்கைத் தாயின் மிகவும் கீர்த்திமிக்க ஒரு மைந்தனை நினைவு கூர்வதாகும்.

1983 ஆம் ஆண்டு நான் முதன்முறையாக பாராளுமன்றத்தில் நுழைந்த போது, மறைந்த திரு.லலித் அத்துலத்முதலி அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் அவர் கொண்டிருந்த அறிவுத்திறன் குறித்து நான் எப்போதும் அவர்பால் ஈர்க்கப்பட்டவனாக இருந்தேன். 1981 ஆம் ஆண்டு அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மஹாபொல உயர்கல்வி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக அந்த நினைவை நிலைநிறுத்தியதன் மூலம், பொது நலனுக்காக தனது சேவையின் தரத்தில் தனது சமகாலத்தவர்களை மிஞ்சிய ஒருவராகவே அப்போது அவர் இருந்தார்.

காலம்சென்ற லலித் அத்துலத்முதலியின் 87வது ஜனன தினத்தைக் கொண்டாடும் போது, 1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய தலைவராக அவர் பொறுப்பேற்ற ஒரு காலகட்டத்தின் நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. தேசத்திற்கு புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்து புதியதோர் யுகத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காலகட்டத்தை அறிமுகப்படுத்திய அரசாங்கம் அது. மூன்று தசாப்தங்களாக இருந்து வந்த மந்தமான நடைமுறைக்குப் பதிலாக, நாட்டிற்கும் மக்களுக்கும் செல்வம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் நிர்வாக முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட முறைமைகள் கடந்த 4 தசாப்தங்களாக நீடித்ததுடன், அவை பல்வேறு திருத்தங்களை உள்ளடக்கியதாகும்.

1977ஆம் ஆண்டு அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் காலம் இருந்ததை புரிந்து கொள்ள முடியும். இது பொருளாதாரத்திற்கு ஏற்ப சந்தைப் பொருளாதாரம் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய புதிய நிர்வாக முறைக்கு தகவமைத்துக்கொண்டது. 1977 முதல் 1984 வரை வர்த்தகம் மற்றும் கப்பல்துறைக்கு பொறுப்பான அமைச்சராக காலஞ்சென்ற திரு.லலித் அத்துலத்முதலி அவர்கள் நிறுவனங்களை முழுமையாக முறைப்படுத்தியதோடு தேவையான நிறுவனங்களை நிறுவினார். இது முதல் முறையாக பரிமாற்ற சந்தைப் பொருளாதாரத்தை நிறுவும் 77 ஆம் ஆண்டு அரசாங்கக் கொள்கையை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதற்காகவாகும்.

பொருளாதாரம் திறந்துவிடப்பட்டதிலிருந்து, ஒரு காலத்தில் மென் வணிகச் சூழலைக் கொண்ட துடிப்பான பல்லினத்தவர் வாழும் துறைமுக நகரமாக இருந்த கொழும்பு, அதன் பரந்த உள்நாட்டில் நிறுவப்பட்ட பிராந்திய பெருநகரத்திற்குள் வணிக நகரமாக மாறியுள்ளது. இந்த காலகட்டத்தில், கொழும்பு துறைமுகமானது தொழில்நுட்பம், செயற்பாடுகள் மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் கப்பல் நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு பெரிய விரிவாக்கத்திற்கு உட்பட்டது. கொழும்புத் துறைமுகம் அது தாபிக்கப்பட்ட முன்னுரிமை மட்டத்தைத் தொடர்ந்து பேணுவதை உறுதி செய்வதற்காக இந்த மூலோபாயத் தலையீடு மிகவும் கிட்டிய காலத்தில் சுட்டிக்காட்டப்படலாம். அதுதான் புதிய ஜெயா முனையமாகும். துறைமுகத் திட்டமிடுபவர்களின் பாராட்டிற்கு அமைய, உலகெங்கிலும் உள்ள துறைமுகங்களின் தரப்படுத்தலில் கொழும்புத் துறைமுகத்தின் முதன்மைத் தன்மையைப் பேணுவதற்கு, திட்டமிடல் மற்றும் மூலோபாயங்களை உருவாக்குவதில் எந்த பின்னடைவும் ஏற்பட்டிருப்பதாகத தெரியவில்லை.

திறந்த பொருளாதாரத்தின் முதல் சில தசாப்தங்களில் பொருளாதார மற்றும் சமூக உறுதியற்ற தன்மை இருந்தபோதிலும், நகர விரிவாக்கம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஈர்க்க முடிந்தது.

13 தசாப்தங்களுக்கும் மேலாக பிரித்தானியரின் ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கை விடுதலை பெற்றமையால், மறைந்த அதுலத்முதலி அவர்கள் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடத் தயங்கவில்லை. அவர் இலங்கை முழுவதும் பயணம் செய்து நம் மக்களிடமும் கிராமங்களிலும் இருந்த வறுமை நிலையைப் புரிந்துகொண்டார்.

காலனித்துவ காலத்தில் இருந்து இன்று வரை, இலங்கையின் சமூக பொருளாதார சார்பு பெரும்பாலும் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை போன்ற பாரம்பரிய ஏற்றுமதி பயிர்கள் மூலம் ஈட்டப்படும் அந்நியச் செலாவணியில்தான் தங்கியுள்ளது. அத்துலத்முதலியின் காலத்தில் ஆடைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா என பல புதிய சேர்க்கைகள் இருந்தபோதிலும், இன்று வரை, நமது சமூக-பொருளாதார கட்டமைப்பின் பெரும்பகுதி வறுமையிலும் கடனிலும் உள்ளது.

2018 இன் இலங்கையின் பிரதான காணிப் பயன்பாட்டு முறைகளின் புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது, நகர்ப்புற காணிகள் சுமார் 2%, வீட்டுத் தோட்டங்கள் 18%, தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைக்கான விவசாய நிலங்கள் 10%, நெற்செய்கை 15% மற்றும் வனப்பிரதேசம் 38 % மற்றும் நீர்நிலைகள் 6% ஆகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணி சீர்திருத்தம் மற்றும் விவசாயத் துறையில் புறட்சிகரமான மாற்றங்களை எதிர்பார்க்கிறார் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அவர் இதனை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய காலனித்துவ நில அபகரிப்புக் கொள்கையானது 1830 களில் இருந்து ஆளும் சட்டமாக இருந்ததுடன், காலனித்துவ முடியாட்சியின் கீழ் அனைத்து நிலங்களையும் கையளித்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் பூர்வீக மக்களை நிலத்தின் அணுகல் மற்றும் உரிமையிலிருந்து முற்றிலும் அந்நியப்படுத்தியது. அவர்கள் இலங்கையின் கிராமப்புற சனத்தொகையில் பெரும் வீதத்தைக் கொண்டுள்ளனர் என்பதுடன், இந்த இக்கட்டான நிலைமையை நாம் உடனடியாக நிவர்த்தி செய்து எமது நிலங்களில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு லலித் அத்தலமுதலி நினைவுதின உரையின் பிரதம பேச்சாளரும் பிரதமருமான நான், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்திக்காக பயிரிடுவதற்கு அதிக நிலத்தினை கோரும் எமது மக்களின், குறிப்பாக விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் குரலை எதிரொலிக்க விரும்புகிறேன். இந்த சுதந்திர அழைப்பை "எங்கள் கிராமத்திலிருந்து உலகிற்கு" என்று அழைப்போம்.

14,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இணைத்து 3-4 கிராமங்களைக் கொண்ட ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரவுக்கும், நாடு முழுவதும் உள்ள 40,000 மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கி இந்த புதிய ஏற்றுமதி மையத்தைத் திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இது 25 மாவட்டங்களில் உள்ள 334 உள்ளூராட்சி பிரதேசங்களில் முதல் 1000 கிராம அலுவலர் பிரிவுகளுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், மொத்த கிராம அலுவலர் பிரிவுகளில் 5000 அல்லது மூன்றில் ஒரு பகுதியை அடைவதை இலக்காகக் கொண்டு, தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு நேரடியாகப் பங்களித்து, உபரியை ஏற்றுமதி செய்து பெறுமதியான அந்நியச் செலாவணியை ஈட்டுவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பல தலைமுறைகளாக இழந்த இலட்சக்கணக்கான நிலங்களுடன் புதிய தலைமுறையும் விடுவிக்கப்பட வேண்டும். இந்த நிலங்கள் பல தசாப்தங்களாக, பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதன் மூலம் அவர்கள் அந்நிய செலாவணியை ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடவும், அவர்களின் சொந்த வருமானத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் இலங்கையின் கிராமப்புற மக்களை சூழ்ந்துள்ள கடுமையான வறுமை மற்றும் கடனில் இருந்து விடுபடவும் முடியும்.

உணவு மற்றும் ஏற்றுமதி உற்பத்திக்கான பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த நிலங்களை கையளிக்கலாம். மறைந்த திரு. அதுலத்முதலியின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட வல்லுனர்கள் உட்பட, எமது புகழ்பெற்ற குழு உறுப்பினர்கள், எந்தவொரு சட்டத்தையும் மீள்வரைவு செய்யவும், பல தலைமுறைகள் மற்றும் நூற்றாண்டுகளாக இழந்ததை மீண்டும் பெறவும் தங்கள் நிபுணத்துவத்தை வழங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பாரம்பரிய பயிர்களான அரிசி, தேயிலை, இரப்பர், தென்னை போன்றவற்றை பயிரிடுவது மட்டுமல்லாமல், 8 பில்லியன்களுக்கு மேல் அதிகரித்துச் செல்லும் உலக சனத்தொகையை இலக்காகக் கொண்டு கறுவா, காய்கறிகள், பழங்கள், தானியங்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் எதிர்காலத்தின் அத்தியாவசிய தேவைகளை இலக்காகக் கொள்வதும் முக்கியம்.

நிலத்தினை விவசாயத்திற்காக மட்டுமின்றி எமது எரிசக்தி நெருக்கடியை வெற்றிகொள்ளவும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, பல்வேறு புதுப்பிக்கத்தக்க சக்திவளங்கள் மூலம் சக்திவளத்தினை உற்பத்தி செய்யப் பயன்படும் நிலம், காலநிலை சவாலுக்கு மட்டுமின்றி எமது சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், போக்குவரத்துக்கும் முக்கியமானது.

ஏற்றுமதிப் பயிர்கள் மாத்திரமன்றி புதிய தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் மூலம் எமது இளைஞர்கள் இலங்கையின் ஆராய்ச்சி செய்யப்படாத அனுபவங்களை சுற்றுலா உலகத்துடன் இணைக்க முடியும். காலநிலை மாற்றம் உலகிற்கு சவாலாக இருப்பதால், எமது பிராந்தியத்தின் தலைநகரங்களில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூட புதிய காற்றை சுவாசிப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.

உணவுப் பயிர்கள் மட்டுமன்றி கடற்றொழில் ஏற்றுமதியும் முக்கியம். 1000 மைல்களுக்கு மேல் பரந்து விரிந்து கிடக்கும் பெறுமதிவாய்ந்த கரையோரங்கள் நெடுகிலும் உள்ள கிராமங்களை புதிதாக நோக்கி உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட வேண்டும்.

அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய எமது தேசம், கூட்டாக இணைந்து அற்புதங்களை படைக்கக்கூடிய மனிதர்களுக்கான பூமி. இலட்சக்கணக்கான கிராம மக்களினதும் அவர்களது சந்ததியினதும் எதிர்காலத்திற்காக விடுதலையைப் பெற்றுக்கொடுத்து “எமது கிராமத்திலிருந்து உலகிற்கு’ என்ற ஒரு புதிய சுதந்திரச் செய்தியை வழங்குகிறோம்.

இறுதியாக, மறைந்த திரு.லலித் வில்லியம் அத்துலத்முதலி அவர்கள் இன்னும் வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கு எமது ஐக்கிய தேசத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்து, தனது இன்னுயிரை அர்ப்பணித்ததை இன்று இங்கு குழுமியிருக்கும் நாமும், நமது தேசமும் எப்போதும் நன்றியுடன் நினைவுகூருவோம்.

இந்நிகழ்வில் கௌரவ மகாசங்கத்தினர் மற்றும் மதகுருமார்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மறைந்த திரு.லலித் அத்துலத்முதலியின் உறவினர்கள், அதுலத்முதலி மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு