உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரும் போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு ஓர் உணர்வுப்பூர்வமான துறையாக அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் உட்பட அத் துறை சார்ந்த அனைவரும், மக்களுக்கு உணர்வுபூர்வமான போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன் தொடர்புடைய போக்குவரத்து அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவு குறித்த விவாதத்தில் இன்று (ஒக்டோபர் 08) பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர்:

"குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவானது ஒரு அமைச்சின் வெளிப்படைத்தன்மைக்கும், பணக் கட்டுப்பாடுக்கும் ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும். வருட இறுதியில் ஏதேனும் ஒரு திட்டத்தைச் செய்வதற்குத் தடைகள் ஏற்படும்போது, குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவு மூலம் இவ்வாறான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவது ஒரு சிறந்த உதாரணமாகும்."

"இதற்கு முன்னர் விடயங்கள் நடந்தேறிய விதம் நமக்கு நினைவிருக்கின்றது. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. போக்குவரத்து அமைச்சு என்பதை மோசடி, ஊழல் அதிகமாகக் காணப்படும் ஓர் அமைச்சாகவே சமூகத்தால் இனம் காணப்பட்டிருந்தது. ஆயினும், தற்போது இந்த மனநிலை மாற்றம் கண்டுள்ளதோடு, அந்த ஊழல் மோசடிகளுக்கு எதிராக மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சின் பொதுப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமான இரு துறைகளாகும்."

"மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை வழங்கும் இந்த அமைச்சு, தற்போது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு, மக்களின் தேவைகளுக்காகச் செயற்படும் நிறுவனங்களாக மாறி வருகின்றன. போக்குவரத்து அமைச்சின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடிச் செல்லும் பயணம் பாராட்டத்தக்கது என நான் நினைக்கிறேன். இந்த குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவின் மூலம், இந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினை மேலும் மக்கள் மையப்படுத்தியதாகவும், மக்களுக்காகச் சேவை செய்யும் திறமையான நிறுவனமாகவும் மாற்ற ஒரு நல்ல வாய்ப்பாக நான் இதைப் பார்க்கிறேன்."

"பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்குப் பிரதான காரணங்களில் ஒன்று பண முகாமைத்துவத்தில் இருந்த பலவீனமே என்பதை நாம் அறிவோம். திட்டங்களைக் கண்டறிவதிலும், அத்திட்டங்களில் இருந்த நிபந்தனைகளில் காணப்பட்ட பலவீனத்தினாலேயே நாம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆகையினாலே, இந்தத் தாக்கம் நமக்கு மிகவும் முக்கியமான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் போன்ற துறைகளிலும் காணப்படுகிறது."

"கடந்த காலம் முழுவதும், மோசமான முறையில் சிந்தித்து பலவீனமான திட்டங்களை ஆரம்பித்தமையையும், அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களில் இருந்த பலவீனங்களையுமே காண முடிந்தது. நாட்டின் மக்களைப் பற்றியோ, நாட்டின் பண முகாமைத்துவம் பற்றியோ சிந்திக்காது எடுக்கப்பட்ட முடிவுகள், முற்றிலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது ஊழல், மோசடியை அடிப்படையாகக் கொண்டோ எடுக்கப்பட்டதால், அந்தத் திட்டங்கள் முன்னோக்கிச் செல்லவுமில்லை, செயற்படுத்தப்படவுமில்லை."

"அத்தகைய பல பிரச்சினைகளை இந்த அமைச்சில் மாத்திரமன்றி, ஒவ்வொரு அமைச்சிலும் நாம் கண்டோம் என நினைக்கிறேன். இந்த ஆண்டு முழுவதும் பாதியில் கைவிடப்பட்ட திட்டங்கள், நிறுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றுக்காக மீண்டும் நிதி ஒதுக்குவது மாத்திரமன்றி, அவற்றை முடிவுக்குக் கொண்டு வரவும், எப்படியாவது முடிக்கவும் வேண்டியிருந்தது. இவை அனைத்தும் இந்தப் பொருளாதார நெருக்கடியின் மற்றுமொரு பக்கமாகும்."

"இவ்வாறான பல காரணிகளை இந்தத் திட்டங்களில் நாம் காண்கிறோம். எனவேதான், குறைநிரப்பு மதிப்பீடு மூலம் மீண்டும் மீட்க முடியாத, முடிக்க முடியாத வேலைகளைத் தொடர வேண்டியுள்ளது. இந்த நாட்டிற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் குறைந்தபட்ச இழப்பை ஏற்படுத்தும் வகையில் இவற்றை முடிக்கவே நாம் இந்த முயற்சியை எடுக்கிறோம்."

"பொதுப் போக்குவரத்து நமக்கு மிகவும் முக்கியமானது. மக்கள் பாதுகாப்பாக, விரைவாகவும், வசதியாகவும் தமது பயணங்களை மேற்கொள்ள முடிவது மிகவும் அவசியமானதாகும். அதேபோல், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் போக்குவரத்து வசதிகளைப் பெறக்கூடிய வகையிலும், பொதுப் போக்குவரத்தை அணுகக்கூடிய வகையிலும் இவற்றை மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானதாகும்."

"இதற்காக இந்த அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் மிகவும் பாராட்டுகிறோம். கல்வி அமைச்சு ஊடாக நாம் போக்குவரத்து அமைச்சுக்கு ஒரு யோசனையை முன்மொழிந்திருக்கின்றோம். பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என்பது ஒரு கட்டிடத்தைக் கட்டுவது மாத்திரமல்ல. அந்தப் பாடசாலையைச் சென்றடையும் வீதியை மேம்படுத்துவது, அந்தப் பாடசாலைக்குச் செல்வதற்கான பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவது, அந்தப் பொதுப் போக்குவரத்துச் சேவையின் தரத்தை உறுதிப்படுத்துவது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இவை அனைத்தையும் பாடசாலை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாகவே நாம் காண்கிறோம்."

"எனவே, போக்குவரத்து அமைச்சியுடன் இந்தக் கலந்துரையாடலை ஏற்படுத்த முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் பல யோசனைகளை முன்மொழிந்திருக்கின்றோம். குறிப்பாக, தூரப்பிரதேசங்கள், கிராமப்புறப் பாடசாலைகள் ஆகியவற்றுக்கான வீதிகள் நேர்த்தியாக இல்லை. அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் சிறுவர்களின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் இவை மேம்படுத்தப்பட வேண்டும்."

"பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் நாம் கலந்துரையாடி வருகிறோம். சிறுவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வசதிகளில் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும். முன்பெல்லாம், குழந்தைகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட நடத்துநர் மற்றும் சாரதிகளின் தரம் இருந்ததை நாம் அறிவோம். அவர்கள் வீதியில் பேருந்தைச் செலுத்திச் செல்லுவதோடு நின்றுவிடாது. அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் மனப்பான்மையும் கொண்டிருந்தார்கள்."

"அந்த மனப்பான்மை மாற்றமும் இந்த நேரத்தில் நமக்கு மீண்டும் தேவைப்படுகிறது. தமது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்காகக் காட்டும் அந்தப் பொறுப்புணர்வும், அர்ப்பணிப்பும் அந்த மனப்பான்மை மாற்றமும் நமக்குத் தேவைப்படுகின்றது. எனவே, இந்த நேரத்தில் போக்குவரத்து அமைச்சு அந்த மனப்பான்மையை மேம்படுத்த ஒரு நல்ல முயற்சியை மேற்கொள்வதைக் காண்கிறோம்."

"மாற்றுத்திறனாளிகள் சமூகம், எமது முதியோர்கள் ஆகியோருக்குப் பேருந்துகளில் மாத்திரமின்றி, எமது ரயில் நிலையங்களில், எமது ரயில்களில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். பயணிகளின் சுகாதார வசதிகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்," என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு