புதிய கல்வி மறுசீரமைப்பில் அறிவு, திறன்கள், விழுமியங்கள் அடங்கிய கட்டமைப்புடன் கூடிய தலைமுறையொன்று உருவாக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2026ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிற்கென அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை 2027ஆம் ஆண்டில் இரண்டாம் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக மாணவர்களுக்கு அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு மேலதிகமாக, அவர்களின் திறன்களை அபிவிருத்தி செய்து, நல்லதொரு விழுமியக் கட்டமைப்பைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை, எத்துமல்பிட்டிய ஆரம்பப் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தை மாணவர்களின் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பாடத்திட்டங்களை மாற்றுவதற்கு மேலதிகமாக, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் மனிதவளத்தையும் வருடத்திற்கு வருடம் மேம்படுத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட மானியங்கள் மூலம் உச்ச அளவிலான பயன்களைப் பெற்று, குறித்த வேலைத்திட்டங்களைத் துரிதமாக நிறைவு செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகளின் தலையீடு அவசியம் எனவும் தெரிவித்தார்.

கல்விக் கட்டமைப்பிற்குள் ஆசிரியர்களையும் அதிபர்களையும் இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகள் பல வருடங்களாக உரிய முறையில் இடம்பெறாத காரணத்தினால், உரிய செயன்முறைகளுக்கு அமைய 23,006 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைகளை நடத்தி நிறைவு செய்துள்ளதாகவும், அதற்கான நேர்முகத் தேர்வும் செய்முறைப் பரீட்சைகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

ஆசிரியரை மையமாகக் கொண்டு அறிவை மாத்திரம் பெற்றுக்கொடுக்கும் கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அவர், தற்போதுள்ள மாணவர்கள் தாம் பெற்றுக்கொள்ளும் அறிவைச் செயன்முறையில் பயன்படுத்துவதிலும், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளின்போது தலையீடு செய்வதிலும் குறைந்த ஆற்றலுடன் காணப்படுவதால், மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வியின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார். அத்துடன், புதிய சீர்திருத்தங்களின் ஊடாக ஆசிரியர்களின் பங்கு விசேடமாக முக்கியத்துவம் பெறுவதால், கல்வித் துறையிலுள்ள தொழில் வல்லுநர்களின் தொழில்சார் தன்மையைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் கல்விச் சபையொன்றை ஸ்தாபிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளைத் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மீள ஆரம்பித்து, அவற்றை நிறைவு செய்துள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இடைநடுவில் நிறுத்தப்பட்ட இதுபோன்ற நிர்மாணப் பணிகளால் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. இதனால், அவற்றை மீளாய்வு செய்து துரிதமாக நிறைவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கி அரசு செயற்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, மனிதவளத்தை அபிவிருத்தி செய்வதற்கென கல்வித் துறையில் பாரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்ள அரசு கடமைப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல், அடிப்படை வசதிகள் மற்றும் நிர்வாக வசதிகளை மேம்படுத்தல் உட்பட, அதிபர்கள், ஆசிரியர்களின் தொழில் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், பொலன்னறுவை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, பொலன்னறுவை நகர மேயர் லலித் திஸ்ஸ குமார, பிரதேச சபைத் தலைவர் வசந்த குமார, பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர், கலாநிதிகள், பெற்றோர், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு