ஆசிரியர் இடமாற்றங்கள் உத்தியோகபூர்வ ஆசிரியர் இடமாற்ற சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும், அதில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் கூறியதாவது:
தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் இதற்கேற்ப மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை தற்காலிகமாக இணைப்புச்செய்யுமாறு வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பாடங்களுக்கு ஏற்பவும் நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்பவும் அவ்வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நாம் எதிர்பார்க்கிறோம்.
ஆசிரியர் இடமாற்றங்கள் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படுவதில்லை, அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஆசிரியர் இடமாற்ற சபையினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் செல்வாக்கு காரணமாகவே ஆசிரியர் இடமாற்றங்கள் இவ்வளவு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
கல்விச் சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடலின் போது, பல வருடங்களுக்குப் பின்னர், அரசியல் தலையீடுகள் இன்றி ஆசிரியர் இடமாற்றல் சபை சுயாதீனமாக இதனைச் செய்ய முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதில் கல்வி அமைச்சராக நான் செல்வாக்கு செலுத்தாததே இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார்கள்.
ஆசிரியர் இடமாற்றங்கள் ஆசிரியர் இடமாற்ற சபையினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடாகும் எனவும் அதற்கு அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு