கல்வியமைச்சராக கடமைகளை ஆரம்பித்த பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு பொருத்தமான பிரஜைகளை உருவாக்கும் திறன்கொண்ட மாணவர்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் சிறுவர்களுக்கு அழுத்தங்களை வழங்காத கல்விக்காக தற்போதைய மாணவச் செல்வங்களை தயார்ப்படுத்த தான் அர்ப்பணிப்புடன் செயலாற்றவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (20) முற்பகல் ’இசுருபாய’ கல்வியமைச்சின் வளாகத்தில் தற்போதைய அரசின் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி அமைச்சின் அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றப் போதே பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், கல்விப் போன்ற விடயதானம் தொடர்பில் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றமை குறித்து உணர்வுபூர்வமாக நான் மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் குறித்த விடயதானத்தில் காணப்படும் பாரதூரம் தொடர்பில் நான் நன்கு அறிந்துள்ளேன். புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கமைய அதிக முன்னுரிமை கல்விக்கு வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை கல்வியை உரிய திட்டமிடல் மற்றும் கால அட்டவணைக்கமைய வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு தேவையான வகையில் தற்போது கல்வித் துறையில் காணப்படும் பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அதிகளவில் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி அமைச்சின் செயலாளராக கே.எம்.ஜீ.எஸ்.என்.கலுவௌ அவர்களும் ’இசுருபாய’ கல்வியமைச்சின் வளாகத்தில் வைத்து தனது பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்றார்.
பிரதமர் ஊடக பிரிவு