ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் திரு. ஷோஹெய் ஹாரா தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஆகஸ்ட் 11 ஆம் திகதி அலரிமாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக JICA நிறுவனம் நீண்டகாலமாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளையும், ’டிட்வா’ அனர்த்த நிலைமையின் பின்னர் நிவாரணப் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய ஆதரவையும் பிரதமர் இதன்போது பாராட்டினார்.
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர் தேவையான நிவாரணச் சேவைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதற்காக JICA முகவர் நிலையத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்த நிலைமைகளுக்குத் தயாராகுதல், அனர்த்தத்தைக் குறைத்தல் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் திறனை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இலங்கை முன்னெடுத்துவரும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையே கலந்துரையாடப்பட்டது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.
கடன் நிவாரணம் உள்ளிட்ட ஏனைய ஒத்துழைப்புகள் ஊடாக இலங்கைக்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்க JICA நிறுவனம் தயாராக இருப்பதாக இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் குழு குறிப்பிட்டதுடன், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் பயன்களைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் JICA நிறுவனம் தயாராக உள்ளதாக அவர்கள் மேலும் வலியுறுத்தினர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள், டொப்ளர் வானிலை ரேடார் தொகுதியொன்றை நிறுவுதல் மற்றும் டிஜிட்டல் தரைவழித் தொலைக்காட்சி வலையமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கழிவு முகாமைத்துவம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் நீண்டகால அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் இத்துறைசார் கூட்டுறவை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் இலங்கை JICA அலுவலகத்தின் தலைமைப் பிரதிநிதி திரு. ஷிகேஓ ஹொன்சு, இலங்கை JICA அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதி திரு. மினோரு மத்சுனோஷிதா, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு