பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கான அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஒக்டோபர் 16, 2025 ஆம் திகதி புதுடெல்லியில் இந்தியக் கைத்தொழில் கூட்டுறவு (CII) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சம்மேளனம் (FICCI) ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பானது, இருதரப்புப் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வலுசக்தி, விவசாயம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, நிதித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக அபிவிருத்தி, திறமை வளர்ப்பு மற்றும் புத்தாக்கம், ஆரோக்கியச் சுற்றுலா, உர உற்பத்தி மற்றும் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கல்விச் சீர்திருத்தம், டிஜிட்டல் மயமாக்குதல், மற்றும் திறமை அபிவிருத்தி ஆகிய முயற்சிகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, அறிவுசார்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் இலங்கையின் உறுதிப்பாட்டினை எடுத்துரைத்தார். எதிர்காலத்திற்குத் தகுந்த பணியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன், இலங்கையின் புதிய கல்வி மற்றும் புத்தாக்கக் கொள்கைக் கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, STEAM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம்) துறைசார் கல்வி மற்றும் திறமை அடிப்படையிலான கற்றல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது என்பதைப் பிரதமர் விளக்கிக் கூறினார்.
குறிப்பாக உற்பத்தி, உள்கட்டமைப்பு, கல்வித் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய துறைகளில் இலங்கையுடனான தமது ஈடுபாட்டை விரிவுபடுத்துமாறு பிரதமர் இந்திய வர்த்தகத் துறைக்கு அழைப்பு விடுத்தார். மேலும், AI மற்றும் புத்தாக்கத் துறைகளில் ஒத்துழைப்பு, தொழில்சார் பயிற்சி, கல்வித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் கூட்டுறவையும் கற்றல் மாதிரிகளின் அவசியத்தையும் முன்மொழிந்தார்.
விவசாயப் புத்தாக்க அமைப்புகள், உரத் தொழில்நுட்பம், ஆரோக்கியச் சுற்றுலா முயற்சிகள் மற்றும் இலங்கையின் நிதிச் சூழலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிதித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான சாதகமான ஒத்துழைப்புக் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் இலங்கையின் கேந்திரோபாய கவனம் செலுத்தப்பட்டிருப்பதைப் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். 2030 ஆம் ஆண்டளவில் 200,000 நிபுணர்களைக் கொண்ட திறமையான தொழிலாளர் படையினை உருவாக்கலும், 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் துறைசார் ஏற்றுமதியையும் இலக்காகக் கொண்டு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதற்குப் பெற வேண்டிய தனியார் துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பில் வேரூன்றிய நீண்டகால இருதரப்பு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன எனத் தெரிவித்தார். மேலும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலின் மையமாக உள்ளது என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமரின் ஊடகப் பிரிவு