ஒவ்வொரு பிரஜையினதும் மொழி உரிமைக்கும் மதிப்பளிக்கும், சமத்துவத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தன்மையை ஒரு சக்தியாக மாற்றியமைக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒவ்வொரு பிரஜையினதும் மொழி உரிமைக்கும் மதிப்பளிக்கும், சமத்துவத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தன்மையை ஒரு சக்தியாக மாற்றியமைக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அரச கரும மொழிகள் வாரத்திற்குச் சமாந்தரமாக நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப் போட்டியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஜூலை 01 முதல் 05 ஆம் திகதி வரை நடைபெறும் அரச கரும மொழிகள் வாரத்தின் ’பாடசாலை தினத்திற்கு’ அமைவாக, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப் போட்டியின் நிறைவு விழா, ஜூலை 02, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள லோட்டஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், "அரச கரும மொழிக் கொள்கை மற்றும் அதன் பயன்பாட்டின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெற்ற விவாதப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலைக் குழுக்களுக்கு பிரதமர் விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

பாடசாலை மாணவர்களிடையே இருமொழிப் பயன்பாட்டைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் ஒன்றும் இதன்போது பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

அரச கரும மொழிகள் வாரம் என்பது வெறுமனே மொழிகளைக் கொண்டாடும் வாரம் மாத்திரமல்ல. இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் தனது சொந்த மொழியில் அரச சேவைகளைப் பெறுவதற்கான உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வாரமுமாகும். அந்த உரிமையைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் எமது பொறுப்பை மீண்டும் நினைவுகூரும் தருணமாகும்.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவைப் பலப்படுத்துவதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, மொழி உரிமைகளை மிகவும் பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம், ஒவ்வொரு பிரஜையும் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் அரச சேவைகளைப் பெறுவதற்கான அரசியலமைப்பு உரிமையானது மேலும் உறுதிப்படுத்தப்படும்.

ஒரு மொழியினை இன்னும் ஒரு மொழியை விட உயர்ந்ததாகக் கருதும் நாட்டை உருவாக்க நாம் முயற்சிக்கவில்லை. சகல மொழிக்கும் சமமான கௌரவம் அளிக்கப்படும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை கிடைக்கப்பெறும், நீதியான, அந்நியோன்னிய புரிதல் மிக்கதொரு அரசையே நாம் கட்டியெழுப்ப முயற்சிக்கிறோம்.

தொடர்ந்தும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர்,

சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் சைகை மொழியையும் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "உங்கள் தாய்மொழியை உங்கள் கௌரவமாகவும், ஏனைய மொழிகளை உங்கள் நட்பின் பாலமாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புதிய வார்த்தையும் மனிதர்களிடையே புரிதலையும், நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்தும் ஒரு படியாகும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்" என மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்

நிகழ்வில் உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார,

"பல தசாப்தங்களாக நாட்டில் நிலவிய இன முரண்பாடுகளை நோக்கும்போது, பன்முகத்தன்மையை ஒடுக்குவதன் மூலம் அல்ல, மாறாக அதனைக் கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதன் மூலமே நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பது உறுதியாகிறது" எனச் சுட்டிக்காட்டியதோடு, மொழி, மதம், இனம் அல்லது கலாச்சாரம் எதுவாக இருப்பினும், ஒவ்வொரு பிரஜைக்கும் சமமான கௌரவமும் உரிமைகளும் கிடைக்கப் பெறுகின்ற ஒரு நாட்டை உருவாக்குவதே எமது பிள்ளைகளுக்கு நாம் கையளிக்க வேண்டிய மிக முக்கியமான தேசிய உரிமையாகும் என்பதை வலியுறுத்தினார்.

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்காக அனைவரும் ஒரே மொழியைப் பேச வேண்டியதில்லை, மாறாக மற்றவர்களின் மொழிகளையும் கலாச்சாரங்களையும் மதிப்பதே அவசியமாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் சமாதானம் என்பது அதிகாரத்தினாலோ அல்லது வெறுப்பினாலோ அல்லாது, மற்றவர்கள் மீது காட்டும் கௌரவம் மற்றும் நாகரிகமான மனிதநேயத்தின் அடிப்படையிலேயே உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் ஆர். ரணவக, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சிரேஷ்ட பேராசிரியர் சந்தகோமி கோபரஹேவா, பேராசிரியர் எஸ். ஜே. யோகராஜா, கலாநிதி சி. டி. எச். எம். பிரேமரத்ன, அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்த ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள், அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு