இலங்கையின் கல்வியை, மதிப்பீட்டு முறைமைகளையும் பரீட்சைகளையும் மையப்படுத்திய அணுகுமுறைக்கு அப்பால் கொண்டு சென்று, மாணவர்களின் திறமைகள், படைப்பாற்றல், அனுபவம் சார்ந்த கற்றல் செயல்முறை மற்றும் பரிபூரண வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நவீனமயமாக்க வேண்டும்., எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஆகஸ்ட் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற "250 ஆண்டுகாலக் கல்விச் சிறப்பு: இலங்கை அமெரிக்கர் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்" (250 Years of Educational Excellence: Lessons from a Sri Lankan American) எனும் தலைப்பிலான பகிரங்க விரிவுரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். 1952ஆம் ஆண்டு முதல் கல்வி, கலாசார மற்றும் தொழிற்துறைப் பரிமாற்றத் திட்டங்களின் ஊடாக இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையே பரஸ்பர புரிதலையும் அமைதியையும் மேம்படுத்தும் சுயாதீன இருதரப்பு ஆணைக்குழுவாகிய அமெரிக்க-இலங்கை புல்பிரைட் ஆணைக்குழுவினால் (US-Sri Lanka Fulbright Commission) இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், கல்வி மற்றும் மதிப்பீட்டு முறைமைகளின் பரீட்சைகளை மையப்படுத்திய அணுகுமுறைக்கு அப்பால் சென்று, மாணவர் செயற்பாடுகளை மையமாகக் கொண்ட, அனுபவம் சார்ந்த கற்றல்-கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்துவதே ஆகும் எனப் பிரதமர் தெரிவித்தார்.
தற்போதைய கல்வி முறைமையிலுள்ள சாதகமான அம்சங்கள் நீக்கப்படமாட்டாது என்பதை வலியுறுத்திய பிரதமர், அம்முறையினூடாகக் கல்வியியல் ரீதியாக வெற்றியடைந்த பல தலைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப அதனை நவீனமயமாக்குவதே இச்சீர்திருத்தங்களின் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோரின் டிஜிட்டல் எழுத்தறிவைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, கல்வித்துறையோடு தொழிற்கல்வித் துறைக்கும் சமமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
கல்விச் சீர்திருத்தச் செயல்முறைக்காக ஒரு மாத காலமாகக் கலாநிதி அபேவிக்கிரம அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குச் சர்வதேச நிபுணத்துவ அறிவும் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானவையாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்திற்கு ஆதரவளித்த புல்பிரைட் ஆணைக்குழு, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிக்கான பட்டமேற்படிப்பு நிறுவனம், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் அதிகாரிகள், பங்காளர்கள் ஆகியோருக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, நவீன மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான கல்வி முறைமையொன்றைக் கட்டியெழுப்புவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்பதையும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
பிரதமர் ஊடகப்பிரிவு