இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. - இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2023.11.02) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்திய நிதியமைச்சரின் விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக 1.0747 பில்லியன் இந்திய ரூபா இந்திய உதவியில் 824 மில்லியன் இந்திய ரூபாயை மத ஸ்தலங்களில் சூரிய சக்தி திட்டங்களுக்காக வேண்டி மட்டும் ஒதுக்கீடு செய்தமைக்கு பிரதமர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

இந்திய-இலங்கை நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேற்கொண்டுவரும் எல்லையற்ற முயற்சிகளை இந்தியா மிகவும் பாராட்டுவதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

"பல தசாப்தங்களுக்கு முன்னர் நாம் எமது சுதந்திரத்திற்காக போராடியபோது, உங்கள் பெற்றோர்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்ததுடன், இப்போது பிரதமராக நீங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த தொடர்ந்து செயற்பட்டுவருவதால் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் இரு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு