இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை - ஜெர்மன் வர்த்தக மாநாடு பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும், திறந்த அதேநேரத்தில் நம்பகத்தன்மைமிக்க கூட்டுறவு நாடாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மே மாதம் 28 ஆம் திகதி கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலில் நடைபெற்ற “இலங்கை - ஜெர்மன் வர்த்தக மாநாடு 2026” நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் ஜெர்மன் தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதி சபை (AHK Sri Lanka) மற்றும் கொழும்பில் அமைந்துள்ள ஜெர்மன் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் பிரதான நோக்கம், கடல்சார் மற்றும் வழங்கல் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சிகரமான இடமாக இலங்கையை ஊக்குவித்தலாகும்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுற்றுலா, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளின் ஊடாக இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் கூட்டாண்மை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக தொழிற்பயிற்சி, தொழிற்கல்வி, புத்தாக்க வலுசக்தி மற்றும் பொருளாதார பரிவர்த்தனை ஆகிய துறைகளில் ஜெர்மனி வழங்கி வரும் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

அத்தோடு, தற்போது இலங்கை, பேரினப் பொருளாதார நிலைத்தன்மையையும், கூடுதல் போட்டித்தன்மை மிக்க பொருளாதார மாதிரியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அரசாங்கம் நிதி ஒருங்கிணைப்பு, கட்டமைப்பு சீரமைப்புகள் மற்றும் நல்லாட்சிசார் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இந்த செயல்முறைகளின் போது பெண்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகங்கள் மீது ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்ற மூலோபாய முக்கியத்துவமிக்க நிலை, திறமையான தொழிலாளர் படை மற்றும் மேம்பட்டு வரும் முதலீட்டுச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில், ஜெர்மன் வணிக சமூகத்தினர் இலங்கையுடன் புதிய கூட்டாண்மைகளை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஜெர்மன் தூதுவர் கலாநிதி ஃபெலிக்ஸ் நியுமன் (H.E. Dr. Felix Neuman), AHK Sri Lanka நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி மார்ட்டின் க்ளோஸே (Mr. Martin Klose) ஆகியோரும் அரச உத்தியோகத்தர்களும் இரு நாடுகளின் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு