சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதும், எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சமமாக நீதியை அணுகுவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர், தற்போது பரிசீலிக்கப்பட்டு வரும் அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் விரிவான மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டார்.
ஒரு தனியான திருத்தத்தின் மூலமாகவோ அல்லது ஒரு நிறுவனத்தை மாத்திரம் மறுசீரமைப்பதன் மூலமாகவோ நீதியை அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியாது எனவும், அதற்காக ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பிலும் விரிவான மாற்றம் அவசியம் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவற்றினால் நியாயமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்வதற்காக கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார். குறிப்பாக, குறித்த நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் பதவிகளுக்கான நியமனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வெற்றிடங்களை நிரப்புதல், மேலதிக உதவி ஊழியர்களை வழங்குதல், வழக்கு விசாரணைகளுக்கான சந்தர்ப்பங்களை அதிகரித்தல் மற்றும் வழக்குகள் குவிந்துள்ள நீதிமன்றங்களுக்கு வளங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், நீதித்துறைக்கு தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்துவதற்கும், விசாரணைகள் தாமதமடைவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகக் காணப்படும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தேவையுள்ள மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவுவதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும், அதன் மூலம் நாடளாவிய ரீதியில் மக்களுக்கு நீதியை அணுகுவது இலகுவாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நீதி வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் பொதுமக்களை கடுமையாகப் பாதித்துள்ளதுடன், அது உயர் வர்க்கத்தினருக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும், விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் நீண்டகாலமாக தாமதமடைந்ததன் காரணமாக ஒவ்வொரு தடவையும் அரசாங்கங்கள் மாறும்போது பொறுப்புக்கூறல் பலவீனமடைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்க முன்மொழியப்பட்டிருப்பது எந்தவொரு தனிப்பட்ட நீதிபதியையோ அல்லது குறிப்பிட்ட நீதிமன்றத்தையோ இலக்காகக் கொண்டதல்ல எனவும், இது சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதற்கு உதாரணமாக, 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 70 இலிருந்து 75 ஆகவும், 2019 ஆம் ஆண்டில் ஹொங்கொங்கில் அந்த வயது வரம்பு 65 இலிருந்து 70 ஆகவும் அதிகரிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்திற்கு நீதித்துறை தொடர்பில் விசேட அதிகாரங்கள் கிடைக்காது எனவும், அரசாங்க நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் அதிகாரச் சமநிலையில் மாற்றம் ஏற்படாது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், அந்த விவாதமானது நீதித்துறையின் சுயாதீனம், செயல்திறன் மற்றும் அணுகும் திறனை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைத் தெளிவாக பிரதிபலிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற ரயில் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சில இளைஞர்கள் மேலதிக பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்த சம்பவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அதன் மூலம் அரச நிறுவனங்கள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு தொடர்பில் மக்களிடையே அதிகரித்து வரும் நம்பிக்கையும் பொறுப்புணர்வும் வெளிப்படுவதாகக் குறிப்பிட்டார்.
பிரதமர் ஊடகப் பிரிவு