இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாகவும் நிலைபேறான முறையிலும் தீர்ப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கக்கூடிய கொள்கை சட்டகமொன்றைத் தயாரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்
இலங்கையின் இளைஞர் தலைமுறையினர் எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கும், அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் தயாரிக்கப்படும் புதிய ’தேசிய இளைஞர் கொள்கை’ (National Youth Policy) 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் நிறைவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
செப்டெம்பர் 16 ஆம் திகதி இரத்மலானை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (OUSL) மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்த “இளைஞர் அபிவிருத்தி தொடர்பான முதலாவது தேசிய ஆராய்ச்சி மாநாடு 2026” (1st National Research Symposium on Youth Development - NRSYD) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
“சுய வலிமைகளை அடிப்படையாகக் கொண்டு சமூக மாற்றத்தின் முன்னோடிகளாக, உரிமைகளைத் தாங்கிய இளைஞர்கள்” (Young People as Right Holders and Change-Makers: Asset-based Pathways for Social Transformation) என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இம்மாநாட்டில், 9 முக்கிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
இத்துறைகளில் இளைஞர் வலுவூட்டல் மற்றும் தலைமைத்துவம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி, சுகாதாரம், உளநலம் மற்றும் போஷாக்கு, இளைஞர் தொழில்முயற்சியாண்மை மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு, தொழில்நுட்பம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் புத்தாக்கம், காலநிலை மாற்றம் மற்றும் பேண்தகு அபிவிருத்தி, சிறுபான்மை நிலை, சமூக ஒருங்கிணைவு மற்றும் சட்டத்தின் ஆட்சி, இளைஞர் புலம்பெயர்வு மற்றும் சர்வதேச உறவுகள், அத்துடன் கலை, கலாசாரம் மற்றும் ஆக்கத்திறன் வெளிப்பாடு ஆகிய துறைகள் உள்ளடங்குகின்றன.
மாநாட்டின் உத்தியோகபூர்வ பிரகடனம் பிரதமர் உள்ளிட்ட பிரதான அழைப்பாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஏ.எம்.எச்.யூ. அருண பண்டார ஆகியோரால் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பின்வருமாறு தெரிவித்தார்:
“2014 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் கொள்கையின் வரைவு ஒன்று தயாரிக்கப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, தற்போதைய தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் தொழில் சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப, அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் புதிய கொள்கையொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் பொது முதலீட்டுத் திட்டத்தின் கீழ், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 145 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இம்மாநாட்டிற்காக 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை ஒரு சிறந்த ஆரம்பமாகும். இதன் மூலம், சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பிற்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பது தெளிவாகிறது.
தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலுக்கு மத்தியில், இளைஞர்களுக்கு கல்விசார் அறிவை மாத்திரம் வழங்குவது போதுமானதல்ல. அறிவுடன் நடைமுறை, தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் திறன்களை வழங்குவது அத்தியாவசியமாகும். அதற்காக, தற்போதுள்ள கல்வி முறைகளில் பாடத்திட்டங்கள் புதிய தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய கேள்விக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும்.
எமது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இளைஞர் அபிவிருத்தி என்பது அனைத்து துறைகளுக்கும் தொடர்புடைய ஒரு விடயமாகும். இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாகவும் நிலைபேறான முறையிலும் தீர்ப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த கொள்கைக் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதே எமது நோக்கமாகும்.
ஒரு கொள்கையைத் தயாரிப்பது என்பது ஆரம்பம் மட்டுமே. தேசிய இளைஞர் கொள்கையின் வெற்றியானது, அதனை நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. இளைஞர்களை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நெகிழ்திறன் (resilient) கொண்ட குழுவாக உருவாக்குவதும், உலகில் இடம்பெறும் சாதகமான மாற்றங்களுக்குத் தலைமைத்துவம் வழங்கும் குழுவாக அவர்களை உருவாக்குவதுமே எமது நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த ஆராய்ச்சி மாநாட்டை அடுத்த வருடம் சர்வதேச மாநாடாக நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இலங்கை ஆராய்ச்சியாளர்களுக்கு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.எம்.சி. திலகரத்ன உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெருமளவிலான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு