நாடு முழுவதும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கல்வியை மேம்படுத்துவதற்காக 5 வருட திட்டம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாடு முழுவதும் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைநிலை கல்வி மையங்கள் (ITDLH) மற்றும் இடைநிலைப் பாடசாலைகளில் கணினி வசதிகளை மேம்படுத்துவதற்காக ஐந்து வருட விசேட திட்டமொன்று இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பக் கல்வி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் பின்வருமாறு தெரிவித்தார்:

2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வொன்றின் மூலம், 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல இடங்களுக்கு புதிதாக கணினி உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது காணப்படும் உபகரணங்களில் பெரும்பாலானவை பழுதுபார்க்க முடியாத நிலையில் இருப்பதால், இடைநிலைப் பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளித்து, புதிதாக உபகரணங்களை வழங்குவதற்கான ஐந்து வருடத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தொலைநிலைக் கல்வி மேம்பாட்டுப் பிரிவின் கீழ் இயங்கும் 109 ITDLH (Information Technology and Distance Learning Hubs) மையங்கள் நாடு முழுவதும் அமைந்துள்ளன. முன்னர் “கணினி வள மையங்கள்” (CRC) என அழைக்கப்பட்ட இம்மையங்கள், 1997 ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.

இம்மையங்களின் மூலம் க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) மாணவர்களுக்கு குறுகியகால ICT பாடநெறிகளை நடத்துதல், பாடசாலையை விட்டு வெளியேறியவர்களுக்கு NVQ பாடநெறிகளை நடத்துதல், கல்வி மறுசீரமைப்புகளுடன் தொடர்புடைய ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல், அதிபர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், இணையவழிப் பரீட்சைகள் மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வசதிகளும் வழங்கப்படுகின்றன.

வட மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு போன்ற பகுதிகளிலும், கிழக்கு மாகாணத்தில் தெஹியத்தகண்டிய, மஹஓயா, கந்தளாய், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், மேல் மாகாணம் உள்ளிட்ட சில பிரதேசங்களிலும் ITDLH மையங்கள் இதுவரை இல்லை. ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற பின்னர் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமை, உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் போதுமான எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிக்காமை போன்ற காரணங்களால் முன்னர் காணப்பட்ட சில CRC மையங்கள் மூடப்பட்டுள்ளன.

2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாததால், தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அந்தப் பிரதேசங்களில் புதிய மையங்களை நிர்மாணிப்பதற்காக மீண்டும் தேசிய திட்டமிடல் திணைக்களத்துடன் கலந்துரையாடி, திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருடாந்தம் பழுதுபார்ப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டாலும், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாகவே இந்த புதிய ஐந்து வருடத் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. அதன்படி, உரிய அனுமதி கிடைத்ததன் பின்னர், 2027 ஆம் ஆண்டளவில் இம்மையங்களிலும் இடைநிலைப் பாடசாலைகளிலும் காணப்படும் வசதித் தேவைகளில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தையேனும் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு