அனர்த்த நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கும் பணிகள் மிக முன்னேற்றகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன! - பிரதமர் ஹரிணி அமரசூரிய
அனர்த்த நிவாரணங்களுக்காக நன்கொடையாகக் கிடைத்த அனைத்து நிதியும்ம் திறைசேரியின் கீழ் பாதுகாப்பாக உள்ளது.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் மற்றும் நிவாரணங்களை வழங்கும் பணிகள் மிகுந்த முன்னேற்றத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்குத் தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் பிரதேச செயலக மட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அனர்த்த நிவாரணச் சேவைகள் மற்றும் அனர்த்த நிலைமைகளுக்காகக் கிடைத்த நன்கொடைகள் குறித்து எழுப்பப்பட்ட வினாவிற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, ஜூலை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,
தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்களினால் சில நிவாரணங்களை வழங்கும் பணிகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்ற போதிலும், தடங்கல்களைக் குறைத்து பணிகளைத் துரிதப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களின் காய்கறி, மிளகாய், வெங்காயம் மற்றும் நெற்செய்கை அழிவுகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் தற்போது மிகுந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன. அதேபோன்று, உயிரிழப்புகள் மற்றும் முழுமையான சொத்து சேதங்களுக்கான கொடுப்பனவுகளும், கால்நடைப் பண்ணை உரிமையாளர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் சிறு மற்றும் குறுந்தொழில் முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கான நிதியுதவிகளும் கணிசமான அளவு வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியோ அல்லது பாதுகாப்புச் செயலாளரோ எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிடவில்லை. அரச அதிகாரிகளின் அதிகபட்ச சேவையினை 24 மணித்தியாலங்களும் பெற்றுக்கொள்வதற்காகப் பாதுகாப்புச் செயலாளரினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதற்கமைய, 2025 நவம்பர் 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ’விரிவான அனர்த்த நிலைமை’ பிரகடனப்படுத்தப்பட்டது. அது ஒரு வர்த்தமானி அல்ல, வெறும் அனர்த்த நிவாரணச் சேவைச் சுற்றறிக்கை மாத்திரமேயாகும். அத்தோடு, அனர்த்தம் ஏற்பட்ட போது 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் நிறுவனக் கட்டமைப்பு முழுமையாக நிறுவப்பட்டிருக்கவில்லை என்பதால், உருவான அவசர நிலைமையை எதிர்கொள்வதற்காக அரசியலமைப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
அனர்த்த நிலைமையின் போது கிடைக்கப்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைப் பணங்கள் எதுவும் சட்டவிரோதமான கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை. அவை திறைசேரியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கணக்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, அதன் சட்டபூர்வத்தன்மை குறித்து எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அதற்கமைய, திறைசேரியின் விசேட கணக்கிற்கு உள்நாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து 7 பில்லியன் 599 மில்லியன் ரூபாயும், வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து 11 தசம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நிதிகள் அனைத்தும் பிரதித் திறைசேரிச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளைக் கருத்திற்கொண்டு, மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் எதிர்காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த ஒதுக்கீடுகள் பிரதானமாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர் நிவாரணங்களை வழங்குவதற்கும், அவர்களின் வாழ்வாதார வழிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சேதமடைந்த பொது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை விரைவாக மறுசீரமைப்பதற்கும் மாத்திரமே பயன்படுத்தப்படும்.
சேதமடைந்த வீடுகளில் சில, அனுமதியற்ற காணிகளிலும், அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளிலும் அமைந்திருந்ததன் காரணமாகப் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. சில வீடுகள் மண்சரிவு உள்ளிட்ட ஆபத்தான வலயங்களில் அமைந்துள்ளதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அவ்விடங்களிலிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளது. அவ்வீடுகள் மற்றும் காணிகள் தொடர்பான பிரச்சினைகளை ஒவ்வொன்றாகத் தீர்த்து, மீள்குடியேற்றங்களை மேற்கொள்வது சுமார் ஒரு வருடம் வரை செல்லக்கூடிய நீண்டதொரு செயல்முறையாகும். இதற்கு மேலதிகமாக, நிரந்தர வீடுகளை இழந்தவர்களுக்கு வாடகை வீடுகளிலோ அல்லது உறவினர்களின் வீடுகளிலோ தங்குவதற்காக அரசாங்கத்தினால் கொடுப்பனவொன்று வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய வசதிகளும் இல்லாதவர்களுக்காகத் தற்காலிக வீட்டுத் திட்டமொன்று (Transitional Housing Project) ஆரம்பிக்கப்பட்டு, அதன் பணிகள் தற்போது கணிசமான அளவில் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன, என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு





