பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை ரூபா 1,350இல் இருந்து ரூபா 1,750 ஆக அதிகரிக்க முன்மொழியப் பட்டிருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இத் துறை சார்ந்தோர்க்கு நியாயமான ஊதியத்தையும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான திட்டங்களின் முதலாவது முயற்சியாக இது அமைகின்றது.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நவம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற தேசியத் தேயிலைச் செயலமர்வின் (National Tea Symposium - InTSym100) அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார்.

இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (Tea Research Institute of Sri Lanka), 1925ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து இந்த ஆண்டுடன் நாட்டிற்காக ஆற்றிய ஆராய்ச்சிப் பணியின் நூற்றாண்டைக் கொண்டாடுகிறது. இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த நிறுவனம் நவம்பர் 10–11 திகதிகளில் கொழும்பு சினமன் கிராண்டில் "சிறந்த சுவைத்தல்: புத்தாக்கங்கள், நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கை முறைகளை இணைத்தல்" எனும் தலைப்பில் சர்வதேசத் தேயிலைச் செயலமர்வு 2025 ஐ நடத்துகின்றது.

இந்த நிகழ்வானது உலகெங்கிலும் வசிக்கும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் துறைத் தலைவர்களை ஒன்றிணைத்து, அறிவைப் பகிர்ந்துகொள்ளவும், புத்தாக்கங்களைப் பற்றி ஆராய்வதற்கும், கூட்டு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலம் தேயிலைத் தொழிலின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் உதவுகிறது.

இந்நிகழ்வில் புதிய தேயிலை இரகமான ’TRI 5000’ பிரதமருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

"இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலை உற்பத்தியானது தொடர்ந்தும் ஒரு முக்கியமான பகுதியாகவே இருந்து வருகின்றது. இதன் மூலம் விவசாய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 10 சதவீதப் பங்களிப்பை வழங்குவதோடு, சுமார் இருபது இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தையும் பெற்றுக் கொடுக்கின்றது. இதன் பொருளாதாரப் பங்களிப்புக்கு அப்பால், தேயிலை என்பது நமது நிலம், கலாச்சாரம் மற்றும் சமூகங்கள் ஆகியவற்றுடன் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது. தேயிலைத்துறையானது சிறு தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முதல் உற்பத்தியாளர்கள், பொதி செய்பவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரை இந்தத் துறை சார்ந்த சகல குடும்பங்களையும் தாங்கி நிற்கிறது.

இலங்கையின் தேயிலை உற்பத்தியில் சுமார் 90 சதவீதம் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, உலகத் தேயிலை அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருவதோடு, சிலோன் தேயிலையின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்காக சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற்றிருக்கின்றது. அரசாங்கம் என்ற வகையில், இந்த முன்னேற்றத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம். அத்தோடு, 2030ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியன் கிலோகிராம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை மற்றும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமான இலக்கை அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

அதே நேரத்தில், தேயிலைத் தொழிலின் மனித வள பங்களிப்பினையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். கொழுந்துப் பறிப்பது முதல், உற்பத்தி, ஆராய்ச்சி, நிர்வாகம் வரை பெண்கள் நீண்ட காலமாக முக்கியப் பங்களிப்பினை வழங்கி வருகின்றார்கள். அத்தோடு இந்தத் துறையின் தொழிலாளர் தொகுதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக உள்ளனர். கோவிட்-19 தொற்றுநோய்களின்போது, ஏனைய சமூகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையிலும், இவர்கள் தொடர்ந்தும் உழைத்து, அரசுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்தார்கள். இவர்களின் இந்த பங்களிப்பைப் பாராட்ட வேண்டும். பாம்புக் கடி முதல் கொழுந்துப் பறிக்கும்போது ஏற்படும் காயங்கள் வரை அவர்கள் குறிப்பிடத்தக்க கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். பலர் இன்னும் சரியான வீடமைப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு வசதிகள் கிடைக்காமை போன்ற சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பெண்களுக்குக் கல்வி, பயிற்சி, பாதுகாப்பான வேலைச் சூழல், நியாயமான ஊதியம் மற்றும் சமமான பதவி உயர்வு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் உறு கொண்டுள்ளது. அண்மையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள், நீண்ட காலமாகச் சொத்துரிமை மறுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,000 வீட்டு உறுதிகளை வழங்கிவைத்தார். இது அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையையும் பெற்றுக் கொடுக்கின்றது.

நவம்பர் 7ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவுசெலவுத் திட்டத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை ரூபா 1,350இல் இருந்து ரூபா 1,750 ஆக அதிகரிக்க வேண்டுமென முன்மொழியப்பட்டிருக்கின்றது. இதில் நாளாந்த அடிப்படை ஊதியம் 1,550 ரூபாவாக அதிகரிப்பதோடு, அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட 200 ரூபாய் நாளாந்த வருகை ஊக்குவிப்புச் சலுகையும் அடங்கும். இது 2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றது. இந்தத் துறை சார்ந்தவர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கான எமது முயற்சிகளின் ஆரம்பத்தையே இது குறிக்கிறது.

அதே நேரத்தில், தேயிலைத் துறையை மேலும் முன்னேற்ற வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்தத் துறையை மேலும் நிலைத்தன்மை, போட்டித்தன்மை ஆகியன மிக்கதாக மாற்றுவதே எமது நோக்கமாகும்" என பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் திரு. சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் திரு. சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் திரு. பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் சகல துறைகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரசாங்கம் குறுகிய கால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை.

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் குறுகிய கால நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், பிரதமர் நவம்பர் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"ஜனாதிபதி அவர்கள் வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாட்டினைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டுச் சரியாகச் செவிமடுத்திருந்தால், அவரது உரையிலும், சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திலும் நம் அனைவருக்கும் பார்க்கவும், கற்றுக்கொள்ளவும் பல விடயங்கள் இருந்தன.

அதன் உள்ளடக்கத்தைப் போலவே, அந்த விடயங்கள், அந்த முன்மொழிவுகள், அந்தப் புள்ளிவிவரங்கள் ஆகிய அனைத்திற்கும் பின்னால் மிகவும் முக்கியமான ஒரு கதை இருக்கின்றது. அந்தக் கதையைச் சரியாகப் புரிந்துகொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

திட்டமிடல் சரியாக இடம்பெறும் போது கொள்கைகள் மற்றும் திட்டங்களை இயற்றுவது மாத்திரம் இன்றி, சட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்போது, இலக்குகளை முதன்மைப்படுத்திய தலைமைத்துவத்துடன், அரசியல் ஒழுக்கத்துடன் ஆட்சி செய்வதன் மூலம் அதன் பெருபேறுகளை எவ்வாறு பெறுவது, ஒரு நாடு எவ்வாறு அபிவிருத்தி செய்கின்றது என்பதைப் பற்றிய மிகச் சிறந்ததொரு உரை வரவுசெலவுத் திட்டத்திலும், வரவுசெலவு உரையிலும் இருக்கின்றது. அதுவே இந்நேரத்தில் முக்கியமானதாகும்.

இது அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டமாகும். நாம் எமது முதலாவது வரவுசெலவுத் திட்டத்தை 2025 ஏப்ரல் மாதத்திலேயே சமர்ப்பித்தோம். ஆயினும் அதற்கு முன்னர் நாம் ஆட்சியைப் பொறுப்பேற்ற வேளையில் நாடு இருந்த நிலைமை, சர்வதேசத்தின் நிலைமை, அத் தருணத்தில் நாட்டு மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ஆகியன அந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு எமக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் பற்றிய ஒரு நிச்சயமற்ற தன்மையே நிலவியது. அவ்வாறு நம்பிக்கைகள் சிதைந்திருந்த ஒரு தருணத்திலேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

வீழ்ந்து கிடந்த நாட்டைப் பொறுப்பேற்ற இந்த அரசாங்கம் ஏப்ரல் மாதத்திலேயே முதலாவது வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தது. நேற்று சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியையே குறிக்கின்றன. அந்த வரவுசெலவுத் திட்டமானது ஒன்பது மாதங்களுக்காகவே சமர்ப்பிக்கப்பட்டது. ஆகையினால் மொத்தச் செலவினத்தை டிசம்பர் மாதத்திலேயே காட்டக் கூடியதாக இருக்கும்.

நாட்டை நிலைப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், நிதி ஒழுக்கத்துடன் நாட்டை நிர்வாகித்தல் மற்றும் ஆட்சிபுரிதல் ஆகியவற்றின் வெற்றியையே ஜனாதிபதி அவர்கள் நமக்குச் சுட்டிக்காட்டினார். அதனை நாம் பாராட்ட வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இன்றி அதனை ஏற்றுக்கொண்ட பின்னரே இதுபற்றி எம்மால் மேற்கொண்டு உரையாடக் கூடியதாகவும் குறை நிறைகளைப் பற்றிச் சுட்டிக்காட்டக் கூடியதாகவும் இருக்கும்.

இதுவரை நாம் ஆறு மாத காலத்திற்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான முன்னேற்றத்தைக் காட்டியிருக்கிறோம். பொதுவாக, அரசாங்கம் அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது டிசம்பர் 31ஆம் திகதியை அடையும்போது இந்தச் செலவானது இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றது. காரணம் எமது செயற்திட்டங்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகையினால் அந்த அடிப்படையில் பார்ப்பதன் மூலம் நம்மால் மிகவும் சரியானதொரு புரிதலைப் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

வீழ்ந்து கிடந்த ஒரு நாட்டையே என்று நாம் இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று திறைசேரி நிரம்பி வழிகிறது என எதிர்க்கட்சியினரே கூறுகிறார்கள். அரசாங்கம் நிதி ஒழுக்கத்தைப் பேணி வருகிறது. இவையனைத்தும் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல. இவை தொலைநோக்குமிக்கத் தலைமைத்துவத்தின் விளைவுகளாகும். இந்தக் நேரத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் பாராட்ட வேண்டிய விடயம் இதுவே என நான் நினைக்கிறேன்.

இங்கே நாம் சந்தோஷப்பட வேண்டிய இன்னுமொரு விடயமும் இருக்கின்றது. நாம் ஆட்சிக்கு வந்தபோது, ஏனைய அரசாங்கங்களைப் போல், எமது ஆட்களைக் கொண்டு நிறுவனங்களை நிரப்பவும் இல்லை. இடமாற்றங்களை மேற்கொள்ளவுமில்லை. எமது இந்த நிலைப்பாட்டைப் பற்றி சில சமயங்களில் எமது கட்சி ஆதரவாளர்களே எம்மைக் குறை கூறினார்கள். இருப்பினும் சரியான தலைமைத்துவத்துடனும், சரியான நோக்கத்துடனும், திட்டமிட்டுச் செயற்பட்டால், அதே அரச சேவையை, அதே அதிகாரிகளை, அதே தலைகளை வைத்துக் கூட எம்மால் சாதிக்க முடியும் என்பதை நாம் நிரூபிக்க வேண்டியிருந்தது. மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன. இதைவிடத் திறமையாகச் செயற்பட வேண்டுமா? ஆம் நிச்சயமாக இதைவிடச் சிறப்பாகச் செயற்பட வேண்டும்.

அரச சேவைக்கு நாம் பெருமளவு சலுகைகளை வழங்கியதற்கும், ஜனவரி மாதம் முதல் இரண்டாவது சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதற்கும், அத்தோடு அரச சேவையில் கிடைக்கப்பெற வேண்டிய ஏனைய சலுகைகளை, கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் காரணம் இன்னும் சிறப்பாகவும் திறமையாகவும் அவர்கள் செயற்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும். இந்த வரவுசெலவுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

அரச சேவையைத் திறமையான, மக்கள் நேயமான, திட்டமிடப்பட்ட, இலக்குகளை நோக்கிய சேவையாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். இதில் 2025 ஜனவரியை விட இன்று நாம் ஒரு முன்னேற்றத்தைக் காண்கிறோம். 2026 ஆண்டில் இதைவிட அதிகமான வளர்ச்சி, இதைவிட அதிகமான முன்னேற்றம், இதைவிட முற்றிலும் வேறுபட்ட திட்டமிட்ட அபிவிருத்திச் செயற்பாட்டைக் காண முடியும் என நாம் நம்புகிறோம். தனிப்பட்ட அல்லது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல், ஒரு குழுவாக, ஒரு கூட்டுச் செயற்பாடாக, நாட்டிற்குத் தேவையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பயணம் என்பதை, தற்போது ஏற்பட்டு வரும் இந்த மாற்றங்கள் மூலம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். நாம் இந்த நாட்டின் ஆட்சியினை ஏற்ற வேளையில் எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பதை மறந்துவிட்டால் எம்மால், இதைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது.

நாட்டிற்குத் தேவையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டமிட்ட பயணம் என்பதை இந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் மட்டும் அல்லாமல், அரச அதிகாரிகளும் மக்களும் புரிந்துகொண்டு இருப்பதனாலேயே எமக்கு இந்தப் பெறுபேறுகளைப் பெற முடிந்திருக்கின்றது. இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். ஏனைய அரசாங்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வேளையில் அவர்கள் செயல்பட்ட விதத்தையும், எமது அரசாங்கம் செயல்படும் விதத்தையும் வெறுமனே மேலோட்டமாக ஒப்பிட்டுப் பார்த்தால், ஏற்பட்டு வரும் மாற்றத்தையும், பரிமாற்றத்தையும் எளிதில் புரிந்துகொள்ள இயலாது என நான் நினைக்கிறேன். காரணம் நாம் பயணிக்கும் பாதை வித்தியாசமானதாகும் என்பதையும் நாம் இங்கே தெளிவாகக் கூற வேண்டும்.

நாம் குறுகிய கால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலோ, தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையிலோ, அமைச்சர்களின் தற்பெருமையை வளர்த்துக் கொள்ளும், அல்லது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவோ அமைச்சின் பின்னால் இருந்து செயற்படவில்லை. இது நாம் கூட்டு உணர்வுடன் உருவாக்கிய ஒரு திட்டமாகும். நாட்டைப் பற்றிச் சிந்தித்து உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். அதற்கு அமையவே நாம் செயற்படுகிறோம். நமது நூற்று ஐம்பத்தி ஒன்பது அங்கத்தவர்களும் அதனைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு இருக்கிறது. அதனை நாம் நிறைவேற்றும்போதே எமது முழுத் திட்டத்தினையும் நம்மால் வெற்றி கொள்ள முடியும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆகையினால் அதன்படியே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

எமதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தை எம்மை விட எதிர்க்கட்சியினறே நன்கு மனப்பாடம் செய்து வந்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அதன் பக்கங்கள், எண்கள், பந்திகள் ஆகிய அனைத்தையும் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். இது எமது ஐந்து வருடத் திட்டம் என்பதையும், இந்த நாட்டைப் பற்றி எமக்கு நெடுங்கால நோக்கு இருக்கின்றது என்பதையும் மிகுந்த அன்புடன் நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

இன்னும் ஐந்து ஆண்டுகளின் பின்னர் தேர்தல் வர இருக்கின்றது. அப்போது அத் தேர்தல் மேடைகளில் எமது முன்னேற்றம் குறித்து நாம் விவாதிப்போம்.

இன்று இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், பலகட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வருகின்றது. ஜனநாயகத்திற்கு எங்கே ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது என நான் எதிர்க்கட்சியிடம் கேட்க விரும்புகிறேன். இந்தப் பாராளுமன்றத்திற்கு இருக்க வேண்டிய முழுமையான நிதிப் பொறுப்பு மீதான அதிகாரத்தினை நாம் முழுமையாகப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானதா? சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஏற்றத்தாழ்வின்றி பாரபட்சம் காட்டாது சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானதா?

தற்போது, பல கட்சிக்காரர்கள் ஆகிய நீங்கள் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். பல கட்சிகள் ஒரே கட்சியாக மாற்றம் பெறும்போது பலகட்சி முறைமைக்கு ஆபத்து ஏற்படவே செய்யும். அந்த வகையில், பலகட்சி முறைமையை ஆபத்தில் வீழ்த்தியிருப்பது உண்மையில் எதிர்க்கட்சியே. தமது கட்சிகளைப் பாதுகாப்பதில், தமது கட்சிகளைக் கட்டியெழுப்புவதில், தமது கட்சிகளை மக்கள் உணரும் விதத்தில், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் கட்டியெழுப்பத் தவறி இருப்பதனாலேயே இன்று நாட்டில் பலகட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் இருக்குமானால், அந்த அச்சுறுத்தல் எதிர்க்கட்சியின் மூலமே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

பலகட்சி முறைமையை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு எந்தவித அவசியமும் இல்லை. அதைச் செய்ய எமக்கு நேரமும் இல்லை. நாம் எதிர்க்கட்சிக்காக ஆட்சிக்கு வரவில்லை. இந்த நாட்டு மக்களுக்காக, இந்த நாட்டைக் கட்டியெழுப்பவதற்காக, இந்த நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். நாம் அதை இலக்காகக் கொண்ட ஒரு பயணத்தை மேற்கொள்கையிலேயே அரசியலில் மாற்றம் ஏற்படுகின்றது. அரசியலிலிருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதில் மாற்றம் ஏற்படுகின்றது. இதுவே உண்மையில் இங்கே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். அதாவது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் மீண்டும் அந்தக் பழைய முறைக்குத் திரும்பிச் செல்ல மாட்டார்கள். இந்தப் புதிய அரசியல் கலாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, உங்களது கட்சிகள் இந்த மாற்றத்திற்கு அமையத் தம்மை மாற்றிக் கொள்ளாது பழையதிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும்வரை உங்களால் இதைப் புரிந்து கொள்ள இயலாது.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாம் கைநழுவ விட்ட, புறக்கணித்த எந்தவொரு துறையோ, எந்தவொரு சமூகக் குழுவோ இல்லை என்பதை விசேடமாக இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மிக நேர்த்தியாக, ஒவ்வொன்றாக, இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகளைச் சரியாக இனம் கண்டு, ஆதரவு தேவைப்படும் சமூகக் குழுக்களைச் சரியாக அடையாளம் கண்டு, ஒரு வருடத்திற்குள் அதற்காகச் செய்யக்கூடியது என்ன, மறுபுறத்தில் நீண்டகால அடிப்படையில் வரிசைப்படுத்தி, கட்டமைப்புரீதியிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிந்தித்து, ஒரு வருடத்திற்குள் எம்மால் செய்யக்கூடியதை மிகவும் தெளிவாகவும், தர்க்கரீதியாகவும், திட்டமிட்டும் சமர்ப்பித்துள்ளோம். ஆகையினால் எந்தவொரு விடயத்தையும் கைவிட்டுச் சென்றிருக்கிறோம் எனக் கூற இயலாது.

நாடு நிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அடுத்த கட்டமாக நாட்டின் வளர்ச்சியை எவ்வாறு அடைவது, நிரம்பி வழியும் திறைசேரியின் பணத்தை எவ்வாறு சரியாக முகாமைத்துவம் செய்து மக்களுக்கு அதன் நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பது, மறுபுறத்தில், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வருவதைத் தடுப்பது எப்படி என்ற அனைத்தையும் சிந்தித்து இந்த வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது" என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கூறினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பங்களாதேசத்தின் வெளிநாட்டுச் செயலாளர், இலங்கைப் பிரதமரைச் சந்தித்தார்.

பங்களாதேசத்தின் வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டுச் செயலாளரும் தூதுவருமான அசாத் ஆலம் சியாம் (Asad Alam Siam) உள்ளிட்ட தூதுக்குழு நவம்பர் 6ஆம் திகதி அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தது.

வெளிநாட்டுச் செயலாளரையும் அவரது தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், தற்போதைய பிராந்திய நிலைமைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நலன்கள் குறித்துக் கலந்துரையாடினார். இதன்போது பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்களுக்கு விசேட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நிறுவனச் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தையும், பயனுள்ள மற்றும் வெளிப்படையான நிர்வாக முறைமைகளை பலப்படுத்துவதற்கு ஊழலை ஒழிப்பதன் தேவையையும் பிரதமர் வலியுறுத்தினார். இரு தரப்பினரும் ஆர்வம் கொண்டிருக்கும் துறைகளில் இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடு குறித்தும் ஆராயப்பட்டது.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

பங்களாதேசத் தூதுக்குழுவில் இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகர் அந்தலிப் இலியாஸ் (Andalib Elias), வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திருமதி இஷ்ரத் ஜஹான் (Ishrat Jahan), வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் (FSO) மனூவர் முகர்ரம் (Manuar Mukarram), வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திரு. மொஹமட் நஹித் ஜஹாங்கீர் (Mohammad Nahid Zahangir) ஆகியோர் இடம்பெற்றனர்.

இலங்கைத் தூதுக்குழுவில் பங்களாதேசத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கௌரவ தர்மபால வீரக்கொடி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. சமந்த பத்திரண ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நிப்பான் நிதியத்தின் (The Nippon Foundation) கௌரவத் தலைவர், இலங்கைப் பிரதமரைச் சந்தித்தார்.

நிப்பான் நிதியத்தின் (The Nippon Foundation) கௌரவத் தலைவர் திரு. யோஹெய் சசகாவா (Yohei Sasakawa) அவர்கள், நவம்பர் 6ஆம் திகதி அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

திரு. சசகாவாவை அன்புடன் வரவேற்றப் பிரதமர், அவரது இரண்டாவது இலங்கை விஜயத்தைப் பாராட்டினார். இதன்போது, ஜனாதிபதியின் பங்கேற்பில் இன்று காலையில் நடைபெற்ற, குஷ்டரோக (Leprosy) நிவாரணம் பற்றிய மாநாடு குறித்துத் திரு. சசகாவா பிரதமருக்கு விளக்கமளித்தார். அத்தோடு விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கு உதவியளித்தல் உள்ளிட்ட, இலங்கையில் நிப்பான் நிதியத்தின் தொடர்ச்சியான செயற்றிட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

அத்தோடு இலங்கையில் இயங்கி வரும், செயற்கை மற்றும் எலும்பு முறிவுச் சாதனப் பாடசாலை (Sri Lankan School of Prosthetics and Orthotics) குறித்துக் கலந்துரையாடியதோடு, அரசாங்கத்தின் உதவியுடன் அந்த நிறுவனத்தைப் பல்கலைக்கழக அந்தஸ்திற்குத் தரமுயர்த்த வேண்டுமென முன்மொழிந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர், இந்த முன்மொழிவின் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யும் பொறுப்பைக் கல்வி அமைச்சுக்குக் கையளிப்பதாகத் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் செயல்படுத்தி வரும், நிப்பான் நிதியத்தின் "100 பாடசாலைகள் திட்டத்தினை"ப் பாராட்டிய பிரதமர், விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களைச் சமூகமயப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். அத்தோடு சில திட்டங்கள் எதிர்கொள்ளும் வளப் பற்றாக்குறையை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

இதன்போது இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், அகியோ இசோமாட்டா​ைAkio Isomat, உடல் அல்லது அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் சம வாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்களது சமூக நலன்களை மேம்படுத்துவதில் இலங்கையுடனான இருதரப்புக் கூட்டணி உறவை பலப்படுத்துவதில் ஜப்பானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

கல்வி, வளங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு அணுகல்தன்மை மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இலங்கை, ஜப்பான் மற்றும் நிப்பான் நிதியம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பொதுவான உறுதிப்பாட்டை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர்.

இந்தச் சந்திப்பில் நிப்பான் நிதியத்தின் கௌரவத் தலைவர் திரு. யோஹெய் சசகாவா , இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாட்டா Akio Isomata, ஜப்பானியத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் திரு. ரியோ தகாவோகா Ryo Takaoka மற்றும் நிப்பான் நிதியத்தின் தலைவரின் செயலாளர் திரு. ஷோட்டா நகயாசு Shota Nakayasu ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தரப்பில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாவித்திரி பானபொக்கே, மற்றும் வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி காயங்கா டயஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர், இலங்கைப் பிரதமரைச் சந்திப்பு

திருச்சீமையின் (Holy See – Vatican) அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடனான உறவுகளுக்கான செயலாளரும் (திருச்சீமையின் வெளிவிவகார அமைச்சர்) பேராயர் Paul Richard Gallagher அவர்கள், நவம்பர் 3ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, கல்வி, நல்லிணக்கம் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு அமைய, அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்துப் பிரதமர் விளக்கமளித்தார். கல்விச் சீர்திருத்தத்தைப் பாராட்டிய பேராயர் Gallagher, “கல்வியே அமைதி, நம்பிக்கை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான புதிய பெயர்” என்று குறிப்பிட்டதோடு, திருச்சீமையின் உலகளாவிய முயற்சியான உலகக் கல்விப் பொன்விழா குறித்தும் எடுத்துரைத்தார்.

போருக்குப் பின்னர் உருவாகி இருக்கும் நல்லிணக்கத்தைப் பற்றி வலியுறுத்திய பிரதமர், தற்போதைய அரசாங்கத்தின் அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளை, அனைவரையும் உள்வாங்கிய, பன்மைத்துவ அணுகுமுறையைப் பற்றி எடுத்துரைத்தார். நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்குத் தொடர்ச்சியான உரையாடல் மற்றும் புதிய சிந்தனை ஆகியன தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையைப் பாராட்டிய பேராயர் Gallagher, சர்வதேச நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு நீதி அமைப்புகள், நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

சந்திப்பின் முடிவில், திருச்சீமையின் திருத்தந்தை Leo XIV அவர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வது குறித்துப் பேராயர் Gallagher முன்மொழிந்தார். இந்தப் பரிந்துரையை வரவேற்றப் பிரதமர், உத்தியோகபூர்வ அழைப்பை விடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகத் தெரிவித்ததோடு, திருச்சீமைக்கு விஜயம் செய்யுமாறு பேராயர் Gallagher விடுத்த அழைப்பையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

வத்திக்கான் தூதுக்குழுவில் கொழும்பில் அமைந்துள்ள திருச்சீமைத் தூதரகத்தின் பொறுப்பாளர் கௌரவ அருட்தந்தை Monsignor Roberto Lucchini, திருச்சீமை அரச செயலகத்தின் இரண்டாம் செயலாளர் Rev. Monsignor Tomislav Zubac ஆகியோரும் உள்ளடங்கி இருந்தனர். இலங்கையின் சார்பாகப் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திரு. சுகீஷ்வர குணரத்ன மற்றும் பிரதிப் பணிப்பாளர் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) திருமதி அனோத்யா சிரஸ்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு.

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme - Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும் இன்று (27) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்தனர்.

1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வரும் உலக உணவுத் திட்டம் (WFP), இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, போசாக்குப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் தாங்குதன்மை (Resilience) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஆதரவை வழங்கி வருகிறது.

2023 - 2027ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) வியூகத் திட்டம் (Strategic Plan) மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்திற்கமைய உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. எம்.எச்.ஏ.எம். ரிஃப்லான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு