இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க ஜைக்கா நிறுவனம் உறுதி...

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) விசேட ஆலோசகர் கலாநிதி ஷினிச்சி கிடோகா, ஜைக்கா நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) விசேட ஆலோசகர் கலாநிதி ஷினிச்சி கிடோகா 2023.12.11 அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார்.

ஜைக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கலாநிதி ஷினிச்சி கிடாவோகா, எதிர்கால உதவித் திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் அபிவிருத்தித் தேவைகளை ஆராய்வதற்கும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளும் இலக்கில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். விவசாயம் மற்றும் கடற்றொழிலை முன்னேற்றுதல், கிராமிய சமூகங்களின் அபிவிருத்தி , கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான சமூக சேவைகளை விரிவுபடுத்துவதற்கு ஜைக்கா நிறுவனம் தனது ஆதரவை வழங்கும் என்று அவர் கூறினார்.

1981 ஆம் ஆண்டு முதல், அனைத்து இலங்கையர்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடு முழுவதிலும் பரந்த அளவிலான திட்டங்களை நடைமுறைப்படுத்தியமைக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன ஜைக்கா நிறுவனத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக பிரதமரின் செயலாளர் தூதுக்குழுவிடம் தெரிவித்தார். தொழில் முயற்சிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்ற முயற்சிகளை முன்னெடுப்பதில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை அதிகரிக்க பெருமளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki, உதவித் தலைமைச் செயலாளர் Tomoko ONO, ஜைக்கா நிறுவனத்தின் தலைவர் அலுவலகம், Tetsuya YAMADA, ஜைக்கா இலங்கை அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி IMAI Kaori, பிரதமரின் ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர மற்றும் ஜப்பான் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு