ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். நாடு முன்னேற்றம் அடைந்தால் அதன் நன்மை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்தான்.
நேற்று (18.03.2024) உடுகம ஆதார வைத்தியசாலையின் நான்கு மாடிக் கட்டிடம் மற்றும் நியாகம பிரதேச வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடிக் கட்டிடத்தின் முதல் கட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
தென்மாகாண சபை ஒதுக்கீடு மற்றும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகளை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உடுகம ஆதார வைத்தியசாலையில் 400 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய நான்கு மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கட்டிடத்தின் நில மாடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சட்ட வைத்திய பிரிவு, முதலாவது மாடியில் சத்திரசிகிச்சை நிலையம் A, B, C மற்றும் இரண்டாவது மாடியில் வார்டு இல. 01, மூன்றாம் மாடியில் வார்டு இல. 05 என்பனவற்றின் மூலம் இப்பகுதி நோயாளிகளுக்கு சுகாதார பராமரிப்பு சேவைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
நியாகம பிரதேச வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டிடத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை 95 மில்லியன் ரூபாவாகும் முதற்கட்டமாக, வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு என்பன அமைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்காக இருபது மில்லியன் ரூபாவை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்-
இலங்கையின் வரலாறு நெடுகிலும் சுகாதாரம் மற்றும் கல்விக்கு விசேட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு முதலீடுகளாலும் சர்வதேச தரப்படுத்தலில் நாம் முன்னணியில் இருந்து வந்துள்ளோம். அதில் இருந்து உருவான மருத்துவர்களின் தலைமுறை நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவையை பாராட்ட வேண்டும். நாங்கள் மிகவும் கடினமான காலத்தை கடந்து வந்துள்ளோம். அந்தக் கடினமான காலத்தை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த கடினமான நேரத்தில், எமது சர்வதேச பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டன. இலங்கை வங்கிகளுடன் வர்த்தகம் செய்வதில்லை என சர்வதேச வங்கிகள் தீர்மானித்தன. எமது நாடு பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியதே இதற்குக் காரணம். அப்போது, அந்த இக்கட்டான நேரத்தில் அறுபட்ட தொடர்பினை மீண்டும் ஒருமுறை இணைக்க அரசுக்கு இயலுமானது.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவித்து, பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு மாற்ற முடிந்துள்ளதன் காரணமாக, இந்த ஆண்டு கிராம அபிவிருத்திக்காக முதலீடு செய்வதற்கு 2024 வரவு செலவுத் திட்டத்தில் பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. பன்முகப்படுத்தப்பட்ட நிதியத்தின்படி, மாகாண சபை நிதி மற்றும் திட்டங்களுக்கான நிதி புதிதாக பொருளாதாரத்தில் சேர்க்கப்படுகிறது.
புதிய ஆட்சேர்ப்புகளின் குறிப்பிட்ட சில வரம்புகளுக்குள் சில ஆட்சேர்ப்புகளுக்கான வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், மருத்துவத் துறை, சுகாதாரத் துறை மற்றும் பல்வேறு துறைகளில் ஆட்சேர்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாதியர் சேவைக்கு பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு வழிவகுக்கும் தாதியர் துறைக்கான விசேட பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தை தயாரித்து அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் தாதியர் துறையை மேலும் விரிவுபடுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறானதொரு வேலைத்திட்டத்துடன் நாம் முன்னோக்கிச் செல்லும் தருணத்தில் பொது சுகாதார சேவைகளை வழங்குவதற்கான செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கான வாய்ப்பு நியகமவிற்கு கிடைத்துள்ளது.
சுகாதார அமைச்சரைக் காணும் போது அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவும், பாராளுமன்ற உறுப்பினர் இசுரு தொடங்கொடவைக் காணும் போது அமைச்சர் அமரசிறி தொடங்கொடவும் நினைவுக்கு வருகின்றனர். நாங்கள் ஒரே நாளில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஒரே நாளில் பாராளுமன்றத்திற்கு வந்து இணைந்து செயற்பட்டோம். மக்கள் சேவைக்கு வலு சேர்க்க பங்களித்தோம். அவ்விருவருன் புதல்வர்கள் தேசிய அபிவிருத்தியில் பங்கேற்பதை பாராட்டுகிறேன். கராப்பிட்டிய பொது வைத்தியசாலை போன்று பல விசேட சேவைகளை வழங்கக்கூடிய வகையில் வைத்தியசாலையில் புதிய அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தியை உருவாக்குவது அவசியமாகும். இதனை வெற்றியடையச் செய்ய அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம். ஆரோக்கியமான இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் மருத்துவத்துறையின் அனைத்து பிரிவுகளினதும் ஆதரவை அரசாங்கத்திற்கும் இந்த வேலைத்திட்டத்திற்கும் பெற்றுக்கொள்வற்காக நாங்கள் செயற்படுகின்றோம்.
ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் அடிப்படையிலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியும். நாடு கட்டியெழுப்பப்பட்டால் அதன் நன்மை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்தான்.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலீ கமகே, காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சம்பத் அத்துகோரள, பாராளுமன்ற உறுப்பினர்களான இசுரு தொடங்கொட, யதாமினி குணவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால, தென் மாகாண பிரதம செயலாளர் சட்டத்தரணி சுமித் அலஹாகோன் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு