வர்த்தகம், பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ரஷ்ய-இலங்கை உறவுகள் பலப்படுத்தப்படும்

ரஷ்ய தேசிய தினத்தை முன்னுட்டு பிரதமர் வாழ்த்து...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். சகார்யனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (2024.06.12) கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது ரஷ்ய தேசிய தினத்தை முன்னிட்டு ரஷ்ய தூதுவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், ரஷ்யா இந்நாட்டின் சிறப்பான நட்பு நாடு என்றும் குறிப்பிட்டார்.

அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த தூதுவர், உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் விரிவுபடுத்துவதற்கு தமது நாடு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு, தாம் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது, இலங்கைக்கு விஜயம் செய்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் தாம் மேற்கொண்ட கலந்துரையாடல்களை நினைவு கூர்ந்த பிரதமர், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ரஷ்ய-இலங்கை அரசாங்கங்களுக்கு இடையேயான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கை முப்படையின் ஓய்வுபெற்ற உறுப்பினர்களின் பிரச்சினை குறித்து பிரதமரும் தூதுவரும் விரிவாக கலந்துரையாடினர். வர்த்தகம், முதலீடு, கல்வி, சுற்றுலா மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர்.

இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, ஊடக ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர மற்றும் ரஷ்ய தூதரகத்தின் ஊடக செயலாளர் ஜேர்மன் பெடோரோவ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு