உள்ளூராட்சி மற்றும் ஏனைய துறைகளில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை ஜப்பானிய உதவியின் கீழ் மீண்டும் ஆரம்பிக்க முடிந்திருப்பது பாரிய வெற்றியாகும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 2024.07.25 அன்று நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் சிறந்த செயலாற்றுகையைப் பெற்ற உள்ளூராட்சி மன்றங்களை பாராட்டுவதற்கான “சுவர்ண புரவர” தேசிய விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களின் செயலாற்றுகையை அதிகரிக்கும் நோக்கில், ’செயலாற்றுகையை மேம்படுத்தும் மற்றும் உறுதிப்படுத்தும் கருவி’ தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு பெறுபேறுகளின்படி சிறந்த செயலாற்றுகையைப் பெற்ற உள்ளூராட்சி மன்றங்களை பாராட்டுவதற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்-

வரலாறு நெடுகிலும், நாட்டின் இருப்புக்கும் முன்னேற்றத்திற்கும் முன்மாதிரியான ஒரு திட்டத்தை நாம் மரபுரிமையாகப் பெற்றிருக்கிறோம். பழங்காலத்தில், பதினைந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக அனுராதபுரத்தில் கிராம சபை முறை இருந்தது. அந்த முறைகளைக் கொண்டு பல்வேறு துறைகள் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்காக அவர்கள் பாடுபட்டனர். நம் நாட்டின் நீர்ப்பாசன முறைமை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. நமது கிராமிய நிர்வாக நிலைமைகள் மூலம் அந்த கட்டமைப்பை அதே வழியில் பாதுகாக்க முடிந்தது.

நமது நாட்டின் நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்கேற்பின் மிகக் குறைந்த மட்டமாக உள்ளூராட்சி அமைப்பை நாங்கள் நிறுவியுள்ளோம். மக்கள் பங்கேற்புடன் நகரத்திலிருந்து நகரத்திற்கு அல்லது உள்ளூராட்சி மன்றத்திற்கு உள்ளூராட்சி மன்றத்திற்கு கொண்டு வரக்கூடிய முன்னேற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விருதுகளை வென்ற உள்ளூராட்சி நிறுவனங்கள் சில முன்மாதிரிகளைச் சேர்த்துள்ளனர். இந்த விருது, அவர்களின் உள்ளூராட்சி அமைப்புகளின் பங்கேற்பிற்காக மட்டும் இல்லாமல், புதிய முன்மாதிரியுடன் பல்வேறு குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளன.

உள்ளூராட்சி நிர்வாகம், ஆட்சியின் தலையீடு, புதிய விடயங்களை உருவாக்கும் முயற்சி, ஆட்சியில் புதிய விடயங்களைச் சேர்க்கும் செயல்முறை ஆகியவற்றை நாங்கள் கௌரவத்துடன் நினைவில் கொள்கிறோம். பல குறைபாடுகள் உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் உள்ளூராட்சி அமைப்பின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டோம். இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீள வேண்டிய நிலைமையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை உருவாக்கினார். உங்கள் உள்ளூராட்சி அலுவலகத்தின் வாயிலில் பொதுமக்கள் வந்து பெட்ரோல், மண்ணெண்ணெய் கேட்கும் காலம் இருந்தது. இப்போது அவை எதுவும் எங்களுக்கு நினைவில் இல்லை. அந்த கடினமான காலகட்டத்தை அரசு வெற்றிகரமாக மாற்றியுள்ளது. பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் அறிவு பரிமாற்றத்திற்கான குறுகிய வழிகளை விளைவித்துள்ளன. எனவே, நாம் ஒரு புதிய சமூகத்திற்குள் நுழையும் ஒரு தருணத்திற்கு நாம் தயாராக வேண்டும். இதற்குத் தயாராகும் வகையில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஆதரவை வழங்க அரசாங்கம் தயங்குவதில்லை.

இலங்கையில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஜப்பான் உதவி செய்துள்ளது. ஜப்பானிய உதவி இடைநிறுத்தப்பட்ட காலகட்டம் முடிவடைந்து இன்று முதல் ஜப்பானிய உதவியின் கீழ் தொடங்கப்பட்ட திட்டங்கள் உள்ளூராட்சி மற்றும் பிற துறைகளில் ஆரம்பமாகிறது. சவாலான பொறுமையுடன் அதற்காக நாம் பயணித்தோம். அரச தலைமைத்துவம் வழங்கிய பலத்தையும் ஆற்றலையும் முன்னெடுத்துச் செல்ல முடிந்தமை இலங்கையின் ஜனநாயகத்தின் மாபெரும் வெற்றியாகக் கருதலாம்.

இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர -

இலங்கையில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. உள்ளூராட்சி நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் விசேட சேவைகளை வழிநடத்துவதில் அந்த நிறுவனங்களின் திறமை மற்றும் பொறுப்பை பாராட்டி இந்த ஸ்வர்ணபுரவர விருது வழங்கப்படுகிறது.

இந்த உள்ளூராட்சி அமைப்புகள் மூலம் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க நிறைய வேலைகள் செய்யப்படுகின்றன. ஒரு அமைப்புக்கு விருது கிடைக்கின்றதென்றால், அந்த அமைப்பின் கீழ் மட்டத்தில் உள்ள பணியாளருக்கும் அந்த கௌரவம் கிடைக்க வேண்டும். கோவிட் தொற்றுநோய்களின் போது, இந்த நிறுவனங்கள் மக்களுக்காக இரவும் பகலும் உழைத்தன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் டெங்கு போன்ற தொற்றுநோய் நிலைமைகளின் போதும் முன்னின்று உழைக்கின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற திட்டங்களை ஆண்டுதோறும் செயல்படுத்த வேண்டும். மேலும், இந்த நிலையை தக்கவைத்து விருதுகளை வெற்றி பெறாத நிறுவனங்கள் விருதுகளை பெறுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

ஆளுநர்களான ரொஷான் குணதிலக்க, நசீர் அஹமட், ஏ.ஜே.எம். முசம்மில், செந்தில் தொண்டமான், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான அசோக பிரியந்த, சிசிர ஜயக்கொடி, டி.பி. ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சமன்பிரிய ஹேரத், யதாமினி குணவர்தன, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சுதத் மஞ்சுள, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, உள்ளுராட்சி அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு