நாட்டின் கல்வித்துறையை மறுசீரமைப்பது மற்றும் அரசத் துறையை டிஜிட்டல்மயப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா ஆகியோருக்கிடையில் 14ம் திகதி மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா பிரதமருக்கு தனது வாழத்துக்களை தெரிவித்தார்.
இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கென இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல், பல்வேறு குழுக்களின் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, கல்வி மறுசீரமைப்புக்கென ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் டிஜிட்டல் பரிணாமத்தின் ஊடாக அரசத் துறையை நவீனமயப்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் UNDP வதிவிட பிரதிநிதி அசுசா குபோட்டா, UNDP டிஜிட்டல் மற்றும் புத்தாக்க குழுவின் தலைவர் பாதில் பாகீர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மென்டிஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு