ரெபியல் தென்னகோன் வித்தியாலயம் மூடப்படக் கூடாது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் அரச அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும்...

மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (06.05.2024) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் அரச அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும். அதற்காகத்தான் உங்களுக்கு நல்ல பயிற்சிகள் கிடைத்திருக்கின்றன. அந்தப் பிரச்சனைகளோடு இருந்து முதிர்ச்சியடைந்துள்ளீர்கள். ஒரே பிரச்சினை தொடர்ந்தும் இருக்குமானால், அது அக்கறையின்மையை காட்டும்.

சாதாரண சேவைகளுக்கு மேலதிகமாக, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி, கலாசார, சமூகத் திட்டங்கள் என பல நூறு மில்லியன்கள் பெறுமதியான பல திட்டங்கள் மஹரகம தொகுதி முழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை விரைவில் மக்களுக்கு கிடைக்கச் செய்து சமூகமயமாக்க வேண்டும்.

இருந்த போதிலும் தேவையற்ற சில முன்மொழிவுகளை பல்வேறு நிறுவனங்கள் ஊடாக ஒருங்கிணைக்கப்படாமல் நடைமுறைப்படுத்த பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெபியல் தென்னகோன் வித்தியாலயத்தின் பிரச்சினையும் அவ்வாறான ஒன்றாகும். இப்பாடசாலையை மூடிவிட்டு அதனை ஜனாதிபதி கல்லூரியுடன் இணைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுக்கு எனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறேன்.

ரெபியல் தென்னகோன் வித்தியாலயம் மூடப்படவேண்டும் என்று மஹரகம பிரதேச மக்களும் பெற்றோர்களும் எதிர்பார்க்கவில்லை. பாடசாலையின் பழைய கட்டிடத்திற்குப் பதிலாக மாற்று ஏற்பாட்டை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு.

இதன்போது இங்கு பிரசன்னமாகியிருந்த ரெபியல் தென்னகோன் வித்தியாலயத்தின் அதிபர், பாடசாலையை மூடிவிட்டு வேறு பாடசாலையுடன் இணைப்பதற்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மஹரகம சாசனாரக்சக பல மண்டலயவின் தலைவர் சங்கைக்குரிய நிகபோத சந்திரஜோதி தேரர், முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, சுலோச்சன கமகே, பிரதேச செயலாளர் தில்ருக்ஷி வல்பொல மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு