கிராமிய விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவுபடுத்த சர்வதேச உதவி

வறுமை ஒழிப்பு, உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் (IWMI) மற்றும் சர்வதேச விவசாய ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு (CGIAR), தங்கள் உற்பத்தி கூட்டாண்மையின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு இலங்கையில் புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சர்வதேச விவசாய ஆராய்ச்சி தொடர்பான ஆலோசனைக் குழுவின் (CGIAR) நிறைவேற்று முகாமைத்துவப் பணிப்பாளர் இஸ்மஹானே எலோவாபி மற்றும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் (IWMI) பணிப்பாளர் நாயகம் மார்க் சுமித் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.(2024.02.02)

விவசாய உற்பத்திகள், கடற்றொழில் மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் கிராமிய மக்களின் ஏற்றுமதி வர்த்தகத்தையும் போசாக்கினை அதிகரிப்பதற்கான புதிய துறைகளை கண்டறியுமாறும் பிரதமர் தூதுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச விவசாய ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழுவின் (CGIAR) நிறைவேற்று முகாமைத்துவ பணிப்பாளர், வேகமாக மாறிவரும் சூழலில், வழக்கமான வர்த்தக அணுகுமுறைகள் ஒரு மாற்றீடு அல்லவென்றும் இதற்கு புதிய வர்த்தக அணுகுமுறைகளின் பொருத்தப்பாடு மற்றும் தாக்கத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்று கூறினார். இதன்படி, இந்த இரண்டு அமைப்புக்களும் இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான புதிய வழிமுறையொன்றை முன்வைக்கவுள்ளன.

சர்வதேச விவசாய ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு (CGIAR) கோழி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்க கென்யா மற்றும் எத்தியோப்பியாவில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஒரு வெற்றிகரமான திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும், மேலும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து பாடசாலை பிள்ளைகளுக்கும் அவர்களது உணவோடு ஒரு நாளைக்கு ஒரு முட்டை இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையிலும் இவ்வாறான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக நீர், நீர்ப்பாசனம் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இலங்கைக்கு அளித்த ஆதரவிற்காக சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் (IWMI) மற்றும் சர்வதேச விவசாய ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு (CGIAR) ஆகியவற்றுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் (IWMI) பிரதம செயற்பாட்டு அதிகாரி சியோன் நியோகி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு