மல்வத்து ஓயா மற்றும் யான் ஓயா திட்டத்தின் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கும் விவசாயத் துறைக்கும் புதிய நன்மைகள்.

கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்படும் மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டத்தை வெளிநாட்டு முதலீட்டுடன் கூடிய அரச-தனியார் கூட்டுத் திட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யான் ஓயா நீர்த்தேக்கத்தில் சூரிய சக்தி மின் தகடுகளை பொருத்தவும் மற்றும் 100 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உத்தேச மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்தில் சூரிய சக்தி மின் தகடுகளை நிறுவுவதற்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து யான் ஓயா அணையை நிர்மாணித்த சீன முதலீட்டாளர்கள் இன்று (2023.09.11) அலரி மாளிகையில் பிரதமருடன் கலந்துரையாடினர்.

மிதக்கும் சூரிய சக்தி மின் தகடுகளை நிறுவுவதன் மூலம் யான் ஓயா நீர்த்தேக்கத்தை மெகா சூரிய மின் உற்பத்தி தளமாகப் பயன்படுத்த முடியும் என்றும், அதன் மூலம் தேசிய மின்கட்டமைப்பிற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்து கீழ் மல்வத்து ஓயா திட்டத்தை நிறைவு செய்வதற்கு தேவையான நிதியை ஈட்ட முடியும் என்றும் சீன முதலீட்டு குழு தெரிவித்துள்ளது.

யான் ஓயா நீர்த்தேக்கத்தில் உள்ள மிதக்கும் சூரிய சக்தி மின் தகடுகள் 50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன, அதை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க முடியும். மல்வத்து ஓயா நீர்த்தேக்கம் இரண்டு வருடங்களில் நிறைவடைந்தவுடன் மேலும் 50 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கும் வகையில் சூரிய சக்தி மின் தகடுகளை நிறுவ முடியும். மேலும், மல்வத்து ஓயா சிறிய நீர் மின் அமைப்பிலிருந்து 1.6 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 22,000 ஹெக்டேயர் நிலத்திற்கு நீர்ப்பாசன வசதியளிக்கும் நெல் மற்றும் பொருளாதார பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் திட்டத்தை மீள ஆரம்பிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். எம். சந்திரசேன பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

சீன முதலீட்டாளர்கள் விவசாயிகளுக்கு அரிசி மற்றும் பொருளாதார பயிர்களை பயிரிடவும் விளைபொருட்களின் ஒரு பகுதியை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் உதவுவதாக தெரிவித்தனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு