புத்தாண்டின் உண்மையான உரிமை எமது பிள்ளைகளுக்கே உரித்தானதாகும்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அல்லது சித்திரைப் புத்தாண்டு இலங்கை தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும்.

இவ்வாறாக, மங்களகரமான சம்பிரதாயங்கள், அனுஷ்டானங்கள் மற்றும் சமயக் கிரியைகளுக்கு முன்னுரிமை அளித்து, பாரம்பரிய மரபுகளைப் பேணி, ஒரே நேரத்தில் ஒரே நோக்கத்துடன் ஒரே சுபநேரத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதை உலகில் வேறு எந்த நாட்டின் கலாச்சாரத்திலும் காண முடியாது.

இயற்கையோடு ஒன்றித்திருந்த எமது முன்னோர்கள் புத்தாண்டில் அதை இன்னும் நிஜமாக்கினார்கள். அவர்களின் வழிவந்தவர்கள் என்ற முறையில் உணவுப் பாதுகாப்பு, சிக்கனம், கலாசாரம், ஐக்கியம் பற்றி நாம் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. தேவை செயற்படுவது மட்டுமேயாகும்.

உணவு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு முகம்கொடுத்து, நாட்டை உணவுத் தேவையில் தன்னிறைவடையச் செய்யும் சவாலினை வெற்றிகொள்வதற்கு விவசாய சமூகத்தினர் ஆற்றிய பங்களிப்பை இந்தப் புத்தாண்டில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

கடந்த காலம் நாம் சிந்திப்பதற்கு நிறையவே கற்றுத்தந்துள்ளது. அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட நோய்கள், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் நாம் முன்னெப்போதும் கண்டிராதவையாகும். மீண்டும் அத்தகைய நிலைமைகளுக்கு முகம்கொடுக்காதிருக்க, அடுத்த தலைமுறைக்கு அவற்றை விட்டுவைக்காதிருக்க, புதிய சிந்தனைகளால் வளம்பெற்ற புதியதோர் ஆண்டில் காலடி எடுத்துவைப்போம்.

புத்தாண்டின் உண்மையான உரிமை எமது பிள்ளைகளுக்கே உரித்தானதாகும். அந்த புத்தாண்டின் மகிழ்ச்சியையும் பாரம்பரியத்தையும் எமது அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாத்து வழங்குவது எம் அனைவரினதும் கடமையாகும்.

தினேஷ் குணவர்தன (பா.உ),
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 ஏப்ரல் 13ஆந் திகதி