அமைச்சர்கள் தீர்மானங்களை எடுக்கும்போது சங்கங்களுடன் கலந்துரையாடுதல் வேண்டும்….. - பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள்

பிரதமருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் 2023.03.14ஆந் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

அதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் அவர்கள் எமது நிறுவனத்தின் உரிமைகள், பகுதி பகுதியாக மாற்றமடையுமெனின், பகுதி பகுதியாக உடையுமெனின், அந்நிறுவனத்தில் சேவையாற்றும், மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உங்களுக்கும் எங்களுக்குமே அந்த வேதனை புரியும்.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்கள் அந்தந்த நிறுவனங்களது தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடுதல் வேண்டும். சில நிறுவனங்கள் தொழிற்சங்கங்களுடன் எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது, தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், மற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்தலானது, ஊழியர்கள் மனமுடைந்துபோவதற்கும், அசௌகரியங்களுக்கு உள்ளாவதற்கும் மட்டுமல்லாமல், நிறுவனத்தின் நிலைபேறான தன்மைக்கும் பாதகமான செயற்பாடாக அமைகின்றது.

அவ்வாறு கலந்துரையாடாமல் தீர்மானங்களை மேற்கொள்வதானது, நிறுவனத்தின் தொழிநுட்ப உறவுகளுக்கு தடையாகவும் அமைகின்றது.

பொருளாதார நெருக்கடிகள், கடன்களைப் பெற்றுக் கொள்ளுதல் என்பனவற்றிற்கு மத்தியில் இன்னும் பற்பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீது சுமைகளை ஏற்றும் அரச நிறுவனங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாத்து முன்னோக்கி செல்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். முதலாவதாக நாம் தற்போதுள்ள இந்த தடைகளைத் தாண்டுவோம்.

இதன்போது, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தமது நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகளை பிரதமரிடம் தெரிவித்ததுடன், அந்தப் பிரச்சினைகள் தொடர்பில் அந்தந்த அமைச்சு மற்றும் நிறுவனங்கள் ரீதியாக அமைச்சர்களுடனும் உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, முன்னாள் அமைச்சர்களான காமினி லொகுகே, மகிந்தானந்த அலுத்கமகே, பொதுமக்கள் முன்னேற்ற தொழிற்சங்க தேசிய நிலையம், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், துறைமுக கிளை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, எல்.ஆர்.டீ.சீ.சங்கம், இலங்கை ரெலிகொம், காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பனவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுமக்கள் முன்னேற்ற ஊழியர் சங்கம், பொதுமக்கள் அரச சேவைகள் சங்கம், பொதுமக்கள் போக்குவரத்து ஊழியர் சங்கம், பொதுமக்கள் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், பொதுமக்கள் ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் உள்ளுராட்சி அதிகாரசபை ஊழியர்கள் சங்கம், அரசாங்க சேவைகள் தொழிற்சங்க சம்மேளனம், பட்டதாரி ஊழியர்களின் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.