நீர் உயிருக்கு சமமானது. அதற்கு எவ்வித மாற்றீடும் இல்லை.

ஆகாயத்திலிருந்து விழும் ஒரு துளி நீர் கூட பயனின்றி கடலைச் சென்றடையக்கூடாது என்பதில் மிகுந்த கரிசனை கொண்டிருந்த எமது முன்னோர்கள் உலகையே வியப்பில் ஆழ்த்திய நீர் விநியோக முறைகளை ஏற்படுத்தினார்கள். நீர் மூலங்களையும் நீர்நிலைகளையும் அவர்கள் தெய்வீக உணர்வுடன் பாதுகாத்து நிர்வகித்து அடுத்த தலைமுறைக்கு கையளித்தனர்.

இன்றைய உலகமயமாக்கல் மற்றும் துரித நகரமயமாக்கலின் மத்தியில் நீர் மூலங்களைப் பாதுகாத்து பராமரித்துப் பேணுவது ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளது. இன்று உலகம் குடிநீர் நெருக்கடியின் விளிம்பில் உள்ளது. நீர் மூலங்களையும் நீர்நிலைகளையும் பெரும் பொருட்செலவில் உற்பத்தி செய்யப்படும் குடிநீரையும் பாதுகாக்கத் தவறினால் அடுத்த உலகப் போர் நீருக்கானதாகவே இருக்கும்.

எனவே, நவீன அறிவையும் தொழில்நுட்பத்தையும் விரைவாகப் பயன்படுத்தி, சிறந்ததோர் தொலைநோக்குப் பார்வையுடன் செயற்படுவதன் மூலம் எமது அடுத்த தலைமுறைக்கு நீரைப் பாதுகாத்து வழங்கும் சவால் எம் முன்னே உள்ளது.

நான் நீர் விநியோக அமைச்சராக இருந்தபோது, நகரங்கள் முதல் தொலைதூர கிராமங்கள் வரை முன்னெடுத்த பாரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான குடிநீர்த் திட்டங்களுக்கு மேலதிகமாக, கிராமிய சமூக குடிநீர்த் திட்டங்களை ஒருங்கிணைத்து சமூக நீர் விநியோகத் திணைக்களம் நிறுவப்பட்டதானது, ’இது என்னுடையது, எம்முடையது’ என்ற உணர்வின் அடிப்படையில் அமைந்த முன் உதாரணமான சமூக பங்களிப்பிலான குடிநீர் திட்டங்களையும் அவற்றின் தொடர்ச்சியான வெற்றியையும் எதிர்பார்த்தாகும்.

நீர் வழங்கல் அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை என்பன பாராட்டத்தக்க அபிவிருத்தி வேலைத்திட்டத்திட்டங்களை முன்னெடுத்து எதிர்பார்க்கப்படும் எதிர்கால இலக்குகளை வெற்றிகொள்ளும் வகையில் செயற்படுவது மிகவும் முக்கியமானதாக நான் கருதுகின்றேன்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த ஆண்டுக்கான உலக நீர் தினக் கருப்பொருளான ’அமைதிக்காக நீர்’ என்ற புத்தாக்க எண்ணக்கருவின் அடிப்படையில் செயலாற்றுவது மிகவும் முக்கியமானதாகும்.

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 மார்ச் 22