தனியார் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டு முயற்சிகள் மூலமாக உற்பத்தித்திறனை அதிகரிக்கும் எண்ணக்கரு அரசாங்க துறையிலும் அறிமுகப்படுத்தப்படும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

களனி – மஹரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ’நில பியஸ’ வீடமைப்புத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (2024.03.14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –

ஒரு நாட்டின் சரியான இருப்புக்கு வினைத்திறனானதும் பயனுறுதிவாய்ந்ததுமான அரச சேவையை உறுதி செய்ய வேண்டும். தகைமைகள் கொண்ட சரியான உத்தியோகத்தர்களை அரச சேவைக்கு இணைத்து அவர்களுக்கு முறையான பயிற்சியளித்து அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மட்டுமன்றி தொடர்ச்சியான சிறந்த சேவையைப் பெறுவதற்கான வசதிகளையும் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும்.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை வழங்கும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பத்தில் தூரப் பிரதேசங்களிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. வரையறுக்கப்பட்ட நகர்ப்புறங்களில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தி உத்தியோகபூர்வ வீட்டு வசதிகளை நிர்மாணிப்பதற்கு அதிக பணம் செலவிடப்படுகிறது. எனவே, முடிந்தளவு அரச காணிகளைப் பயன்படுத்துவதே எமது திட்டம். முன்பை விட அதிக சேவையை நாம் மக்களுக்கு வழங்க வேண்டும்.

பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவது, அரசதுறைக்கு தேவையான தங்குமிடவசதிகளை இயன்றவரை வழங்குவதுடன், அவர்களின் சேவையை எளிதாக மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று முப்பத்து ஒரு வீடுகள் உங்களிடம் கையளிக்கப்படுகிறது.

அண்மைய கலந்துரையாடல்களில் அரச நிர்வாக நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பல்வேறு நடைமுறை கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நிறைவேற்று அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கடந்த கால பொருளாதார நெருக்கடிகளை பரஸ்பர புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் எதிர்கொண்டனர். அதன் மூலமே மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியுமானது. இவ்வாறான அவசரகாலச் சூழ்நிலைகளால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுகளில் இருந்து மீண்டும் பொருளாதார முன்னேற்றம் தற்போது அடையப்பெற்று வருகிறது. அந்த நம்பிக்கை அரச துறையில் உள்ள அனைவரினதும் ஆதரவின் மூலம் உருவானதாகும்.

கூட்டு முயற்சியின் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் எண்ணக்கரு தனியார் துறையிலேயே இதுவரை செயற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணக்கருவை பொதுத்துறைக்கு கொண்டு வர உலக தொழிலாளர் அமைப்புடன் இணைந்து புதிய முயற்சியில் ஈடுபட அமைச்சரவை முடிவு செய்தது. எனவே, அரச சேவையில், பல்வேறு திணைக்களங்களில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, புதிய சிந்தனைகளுடன், அவர்கள் தங்கள் வசதிகள், உரிமைகளைப் பெற்று, அவர்கள் எதிர்பார்க்கும் எதிர்கால முன்னேற்றத்தை நோக்கிச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

இராஜாங்க அமைச்சர்களான அசோக பிரியந்த, சிசிர ஜயகொடி, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் பிரதீப் விதான, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு